பிரதமர் மோடி இன்று கோவை வருகை: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்,எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்கிறார்
விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார். இதையொட்டி கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கோவையில் பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு செல்கிறார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதைதொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால் நாளை பயணிகள் தங்கள் வாகனங்களை விமான நிலையத்தின் வழக்கமான நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு 3 நிமிடங்கள் வரை அனுமதி உண்டு.
சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் தற்காலிகமாக ‘ரெட் ஜோன்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிரதமரை எடப்பாடி சந்திக்கிறார்
கோவைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். விமான நிலையம் வந்து இறங்கும் பிரதமரைஎடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். தொடர்ந்து விமான நிலையத்திலேயே அவர் பிரதமர் மோடியுடன் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதமரை சந்திக்கும்போது கூட்டணி விவகாரம் மற்றும் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுவார் என தெரிகிறது. இதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
போக்குவரத்து மாற்றம்
பிரதமர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவைக்கு பிரதமர் மோடி நாளை வருகை புரிவதால் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நேரத்திற்கு தகுந்தாற் போல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
கோவை மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம். நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பில் யூ–டர்ன் செய்து புளியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்ட் டி பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.