அதிமுக நிர்வாகிகள் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் •பழனிசாமி அறிவுரை
Jul 08 2025
260

சென்னை, ஜூலை 9-
மீண்டும்ஆட்சி அமைய அதிமுக நிர்வாகிகள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தினார்.
கோவை மாவட்ட அதிமுகவின் மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவரது முன்னிலையில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் நேற்று இணைந்தனர். இதில் பழனிசாமி பேசியதாவது
‘‘ நாட்டிலேயே ஜனநாயகமான கட்சி என்றால் அது அதிமுக தான். நாட்டிலேயே ஜனநாயகம் மிக்க கட்சி என்றால் அது அதிமுக தான். அதிமுகவில் தான் தலைமைக்கு விசுவசமாக, மக்களுக்கு சேவை செய்பவர்கள், சிறப்பான முறையில் பணியாற்றுபவர்கள் உயர்ந்த இடத்துக்கு வரக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சந்திக்காத சோதனைகளா?. இருபெரும் தலைவர்கள் இந்த இயக்கத்தை கட்டிக்காத்த வரலாறு இங்குள்ள அத்தனை பேருக்கும் தெரியும். சாதாரணமாக இந்த இயக்கம் தோன்றவில்லை. பல்வேறு இன்னல்கள், துன்பங்கள், துயரங்களை நம் தலைவர்கள் சந்தித்து, வரலாறு படைத்து அந்த கட்சியை நம்மிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, அனைவரும் கூட்டுப் பொறுப்போடு கடினமாக உழைத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
எத்தனையோ விதத்தில் நம் இயக்கத்தை உடைக்க முயற்சித்தனர். அத்தனையையும், இருபெரும் சக்தியால் தகர்த்தெறிந்தோம். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், இங்கு வந்துள்ள நிர்வாகிகள் எல்லாம், படைக்கு சிப்பாய் இருப்பது போல், தேர்தல் நேரத்தில் சிப்பாய்களாக இருந்து, தேனீக்களை போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு இருபெரும் தலைவர்களின் கனவை நனவாக்க வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், அருண்குமார், ஜெயராம்,செல்வராஜ், கந்தசாமி, தாமேதரன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?