‘வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை அளிக்கிறது’’: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

‘வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை அளிக்கிறது’’: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்


மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்தச் சூழலில் வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை அளிக்கிறது என ஷேக் ஹசீனா உருக்கமாக தெரிவித்துள்ளார்.


கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.


இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


ஜனநாயகத்தின்


துயரமான அழிவு...


மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தண்டனையை அறிவிக்க உள்ளது. இந்த தீர்ப்புக்கு முன்னதாக தனது ஆதரவாளர்களுக்கு ஆடியோ செய்தி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–


கடந்த கோடையில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்தின் துயரமான அழிவு. மாணவர்கள் போராட்டங்களாகத் தொடங்கியவை, ஜனநாயக விரோத சக்திகளால் தூண்டப்பட்டதாகும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறை மற்றும் மிரட்டல் மூலம் அகற்ற சதி செய்தனர், இது குழப்பம் மற்றும் தேவையற்ற உயிர் இழப்புக்கு வழிவகுத்தது. பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசம் அடைந்தது.


என் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வன்முறை அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் டாக்காவை விட்டு வெளியேறுவதே எனது ஒரே வழி என்பது தெளிவாகத் தெரிந்தது. எனது தாயகத்தை விட்டு வெளியேறியது வேதனையாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அர்த்தமற்ற முறையில் தலைகீழாக மாற்றப்பட்டதையும் பார்ப்பதும் கடினமாக இருந்தது.


எனது தந்தையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்தை அழித்தது, வங்கதேச வரலாற்றிலிருந்து நமது சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தை அழிக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான முயற்சியாகும்.


முகமது யூனுஸ் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, மத சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை அலைகளால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன்.


ஊழல்வாதியும், அடக்கு முறையாளரும், கொலைகாரருமான யூனுஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நிச்சயம் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். மக்கள் நீதி வழங்குவார்கள்.


நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன். மக்களின் நலனுக்காக மீண்டும் பாடுபடுவேன். வங்கதேச மண்ணில் நீதியை நிலைக்க செய்வேன்.


இன்று வரை, ஆயிரக்கணக்கான தனிநபர்கள், வீடுகள், வணிகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன, மேலும் பலர் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனது 15 ஆண்டுகால பதவிக்காலத்தில், தீவிரவாத சக்திகளைக் கட்டுப்படுத்தவும், நமது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற மதிப்புகளை நிலைநிறுத்தவும் நாங்கள் கடுமையாக உழைத்தோம்.


நான் 10 லட்சம் ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுத்தேன். அவர்கள் என் மீது மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டுகிறார்களா? அவர்கள் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அது குறித்து எனக்கு கவலை இல்லை. இது இறைவன் கொடுத்த உயிர். அதை அவரே எடுத்துக்கொள்வார். நான் எனது நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். என் பெற்றோரையும், என் உடன்பிறப்பு களையும் இழந்து விட்டேன். என் வீட்டை எரித்துவிட்டார்கள்.


இவ்வாறு ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%