அப்பாடா… தப்பிச்சான்

அப்பாடா… தப்பிச்சான்



சமீப காலமாய் ரகு தன் தம்பி அருளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். முன்பு அந்தப் பார்வையில் பெருமை இருந்தது. இப்போது… ஒருவித பயம் தோன்றியிருந்தது.


அருளின் நடை மாறியிருந்தது.

குரலில் ஒரு பெண்மைத்தனம். சிரிப்பில் ஒருவித கவர்ச்சி. 


கல்லூரி நண்பர்கள் அவனைப் பார்த்து “டேய் அலி!” என்று கூச்சலிடும் போது, ரகுவின் உள்ளம் நொறுங்கிப் போகும்.


“இதெல்லாம் ஒரு வயசு கோளாறு… கொஞ்ச நாளில் சரியாகிடும்”என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாலும், யதார்த்த உண்மை ரகுவை தூங்க விடவில்லை.


அருளின் எதிர்காலத்தை நினைத்து வருந்தினான். இந்த சமூகம் அவனை எப்படியெல்லாம் பாடுபடுத்தும் என்பதை எண்ணிக் கலங்கினான்.


ஒருநாள் இந்த உண்மை வீட்டுப் பெரியவர்களுக்குத் தெரிய வரும் போது அவர்களது நிலைப்பாடு எப்படி இருக்கும்?


“நீ நம்ம குடும்பத்துக்கே அவமானம்”

என்று சொல்லி அவனை இழுத்து வெளியே தள்ளி விடுவார்களோ?


அதை நினைக்கையில் ரகுவின் சப்தநாடியும் ஒடுங்கிப் போகும்.


“அண்ணா… நான் வேற மாதிரி இருக்கிறேனா?” என்று கேட்ட அந்த இரவில் தம்பி அருள் கேட்ட போது,

ரகு பதில் சொல்லவில்லை.


அவன் தலையை மட்டும் தட்டி விட்டு

“தூங்குடா” என்று சொல்லித் திரும்பி படுத்தான்.


அந்த மௌனம்தான் அருளுக்குக் கிடைத்த கடைசி ஆலோசனை.


அந்த நாள் மாலை… பேருந்து தீப்பற்றிய விபத்து. இறந்தவர் பெயர்ப் பட்டியலில் அருளின் பெயர்.


ரகுவின் இதயம் வெடித்துச் சுக்கு நூறாகியது.


மருத்துவமனை வாசலில் அப்பா தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.


அம்மா அருளின் பெயரைக் கத்திக் கத்தி அழைத்துக் கதறினார்.


முகமே அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகியிருந்தான் அருள்.

கையில் அவன் அணிந்திருந்த அந்த நீல நிற வளையல் மட்டும்

அவன்தான் என்று அடையாளம் சொன்னது.


வீட்டில் உறவினர் கூட்டம். ஒப்பாரிச் சத்தம். ஆறுதல் வார்த்தைகள்.


“பாவம் அமைதியான பையன்… நல்லாப் படிப்பான்"

என்று எல்லோரும் சொன்னார்கள்.


ரகு மட்டும் எதுவும் பேசவில்லை.


அன்று இரவில் யாருக்கும் தெரியாமல் ரகு கோவிலுக்குப் போனான்.

கண்கள் உலர்ந்திருந்தன. இதயம் மட்டும் விசித்திரமாகத் துடித்துக் கொண்டிருக்க, "அப்பாடா… என் தம்பி தப்பிச்சான்....இந்த சமூகம் அவனை நசுக்குவதற்கு முன்... தப்பிச்சான்"என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.


 ''நல்லவேளையாய்... அப்பா...

அம்மாவின் கண்களில் அவமானமாக மாறுவதற்கு முன், அவன் போய்விட்டான். இந்த உலகத்திலிருந்து அல்ல… இந்த உலகின் வன்முறையிலிருந்து"


ரகு கண்களை மூடி இறைவனுக்கு நன்றி சொன்னான்.


அந்த நொடியில் அவனுக்குள் ஒரு குரல் கேட்டது. "நீ அவனைக் காப்பாற்றவில்லை ரகு…உன் பயத்தை மட்டுமே காப்பாற்றிக் கொண்டாய்.”


கோவில் மணி ஒலித்தது.


அது அருளின் சிரிப்பைப் போலிருந்தது.


ரகு முதன் முறையாக அழுதான்.



முகில் தினகரன்

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%