மியாவ்

மியாவ்



    சுரேஷுக்கு 'எலுரோபோபியா'.


  அப்படியென்றால், பூனையைக் கண்டால் அவனுக்கு பெரும் அலர்ஜி. இதயமே துடிப்பதை நிறுத்தி விடும் போலாகிவிடும்.


  அன்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப இரவாகி விட்டது. தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. 


   தூரத்தில் ஒரு ஜோடி கண்கள் மின்னுவதைக் கண்டான். அவனது கால்கள் அங்கேயே உறைந்து நின்றன.


  அந்த உருவம் மெதுவாக அவனை நோக்கி நகரத் தொடங்கியது.


  அதன் 'மியாவ்' சத்தம் காற்றில் தவழ்ந்து வந்தபோது, சுரேஷுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. நெற்றியில் வேர்வை துளிர்த்தது. அவன் தன் பையை இறுகப் பிடித்துக் கொண்டு வேகமாகக் நடக்கத் தொடங்கினான். 


  அவன் வேகம் எடுக்க எடுக்க, அந்த நிழல் உருவமும் அவனைப் பின் தொடர்ந்தது


   திடீரென்று அந்தப் பூனை ஒரு சுவற்றின் மீதேறி, அவன் தலைக்கு நேராக நின்றது. அதன் கண்கள் இருட்டில் அம்புகளைப் போல ஜொலித்தன. சுரேஷ் பயத்தில் கண்களை மூடிக் கொண்டான். அவனது சுவாசம் வேகமானது. 


    மெதுவாக ஒரு கண்ணைத் திறந்து பார்த்தான். அந்தப் பூனை எங்கோ காணாமல் போயிருந்தது. ஆனால், அவனது பயம் மட்டும் போகாமலே இருந்தது. 


  வேக வேகமாய்ச் சென்று வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து தாழிட்ட பிறகுதான் அவனுக்கு உயிர் வந்தது. சோபாவில் அமர்ந்து பெருமூச்சு விட்டான்.


அப்போது மீண்டும் அந்த ஓசை. "மியாவ்... மியாவ்"

 

தேடினான். சோபாவிற்கு அடியிலிருந்து அந்தச் சத்தம் வர குனிந்து பார்த்தான்.


"அய்யோ..." கத்தியபடி எழுந்தான்.


 பயத்தில் மீண்டும் ஒருமுறை அவன் இதயம் எகிறியது. 


"அங்கிள்...அங்கிள்... எங்க பிங்கி இங்க வந்திச்சா?" பக்கத்து வீட்டு எல்.கே.ஜி.சிறுமி உள்ளே வந்து கேட்க,


சுரேஷ் விழிக்க, "மியாவ்" சத்தம் வந்தது


சத்தம் வந்த இடத்தைக் கண்டு பிடித்து விட்ட சிறுமி கீழே உட்கார்ந்து சோபாவிற்கு அடியிலிருந்த பூனையைக் கையால் பற்றி வெளியில் இழுத்தாள்.


திகிலுடன் சுரேஷ் பார்க்க, அதை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்ட சிறுமி, "என்ன பிங்கி... சாப்பிடற நேரமாச்சே... பசிக்கலையா?" கேட்டபடியே வெளியேற, 

   

   அந்த நிமிடத்தில் சுரேஷின் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. "இந்தச் சின்னப் பொண்ணு கூட கொஞ்சமும் பயப்படாம பூனையைக் கைல தூக்கிக் கொஞ்சிட்டுப் போகுது... ஆனா நான் மட்டும் ஏன் நடுங்கறேன்!..." யோசித்தான்.


  "அப்படின்னா... எனக்கு இருக்கும் இந்த 'எலுரோபோபியா' ஒரு வியாதியல்ல... என்னோட மனசுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மாய நிழல்... நான் நெனைச்சா அதை ஈஸியாத் தூக்கி எறியலாம்!". 


   அன்று முதல் அவன் பூனைகளுக்கு பயப்படுவதிலிருந்து விடுபட்டான்.


    பெரிய பெரிய மனநல நிபுணர்களால் குணப்படுத்த முடியாத அவனது 'எலுரோபோபியா"வை எளிதாய்த் தீர்த்து விட்ட சிறுமியைப் பாராட்டத் தேடினான்.


(முற்றும்)



முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%