நீலகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 17,718 மிதிவண்டிகள் மாணவர்களுக்கு விநியோகம்: கா.ராமச்சந்திரன் தகவல்
தமிழ்நாடு துணை முதலமைச்சர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா மாதிரி உயர்நிலைப்பள்ளியில் கடந்த 14ந் தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, முன்னிலையில், உதகை சிஎஸ்ஐ ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 109 மாணவிகளுக்கு ரூ.5.18 லட்சம் மதிப்பில் மிதிவண்டிகளை வழங்கினார்.
அரசு தலைமை கொறடா உரையாற்றியபோது கூறியதாவது:
முதலமைச்சர் கல்வித்துறைக்கு முன்னுரிமை அளித்து மிகப்பெரிய நிதி ஒதுக்கீடுகளுடன் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விலையில்லா சீருடை, நோட்டு புத்தகம், காலணிகள் போன்ற இலவச நலத்திட்டங்கள் பயனளித்து வருகிறது.
மாணவர்கள் பள்ளிக்கு தாமதமின்றி வர உதவுவதற்காக விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரூ.8.67 கோடி மதிப்பில்
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2021–2022ல் 5,410 மாணவர்களுக்கு ரூ.2.74 கோடி மதிப்பிலும், 2022–2023ல் 4,074 மாணவர்களுக்கு ரூ.1.96 கோடி மதிப்பிலும் 2023–2024ல் 4,087 ரூ.1.97 கோடி மதிப்பிலும், 2024–2025ல் 4,147 ரூ.1.99 கோடி மதிப்பிலும் என மொத்தம் இதுவரை 17,718 மிதிவண்டிகள் ரூ.8.67 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
2025–2026 கல்வியாண்டில் 1,565 மாணவர்கள் மற்றும் 2,059 மாணவிகள் என மொத்தம் 3,624 மாணவ, மாணவியருக்கு ரூ.1.74 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படும். தற்போது உதகை சிஎஸ்ஐ ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 109 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த திட்டங்கள் அனைத்தும் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் இத்திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது, உதகை நகரமன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், பள்ளி தலைமையாசிரியர் ஜே.எஸ்.எல்மினா, ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.