திருவாரூரில் ரூ.2 லட்சம் பணத்துக்காக பள்ளி மாணவரை கடத்த முயற்சி: 5 பேர் கைது
Jul 26 2025
12

திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே ரூ.2 லட்சம் பணத்துக்காக பள்ளி மாணவரை கடத்த முயன்ற கும்பலை கிராம மக்கள் துரத்திச் சென்று பிடித்தனர். கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சௌரிராஜன் (40). இவரது மனைவி மலர்விழி (37), இவர்களது மகன் மைக்கேல் ராஜ் (13). சௌரிராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த நேதாஜி (33) என்பவரின் சகோதரரை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நேதாஜியிடம் ரூ.2 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். சௌரிராஜன் சொன்னபடி வெளிநாடு அனுப்பவில்லை.
பலமுறை நேதாஜி கேட்டும் பணத்தை திருப்பிக் கொடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த நேதாஜி தனது உறவினர்களான விருதாச்சலத்தை சேர்ந்த வீரமணி (47), தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமிழ்திருமூர்த்தி இளையராஜா (42), ஆனந்தகுமார் (42), ஆகியோருடன் நேற்று மாலை நாச்சிகுளத்துக்கு சௌரி ராஜனின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீடு பூட்டி இருந்த நிலையில், அவரது குடும்பத்தை பற்றி விசாரித்துக் கொண்டு, அவரது மகன் மைக்கேல் ராஜ் அங்குள்ள தனியார் பள்ளியில் படிப்பதை தெரிந்து கொண்டனர். பள்ளி விடும் நேரம் வரை காத்திருந்த நேதாஜி மற்றும் அவரது உறவினர்கள், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மைக்கேல் ராஜை வரும் வழியிலேயே மறித்து காரில் கடத்திச் செல்ல முற்பட்டனர்.
மைக்கேல் ராஜ் கூச்சலிட்டதை கண்ட அப்பகுதி மக்கள் ஒன்று கூடி, காரில் கடத்திய கும்பலை வழிமறித்து மைக்கேல் ராஜை மீட்டதுடன், கடத்தல் கும்பலையும் பிடித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில், இவர்கள் 5 பேர் மீதும் ஆள் கடத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து முத்துப்பேட்டை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?