நாமக்கல் கிட்னி விற்பனை புகார்: தானமாக வழங்கியவர், பெற்றவர்களிடம் சிறப்பு குழு விசாரணை

நாமக்கல்/சென்னை:
பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை புகாரைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தானமாக சிறுநீரகத்தை வழங்கியவர்கள் மற்றும் பெற்றவர்களிடம் சிறப்புக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஏழை, எளிய விசைத்தறி கூலித் தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து அவர்களது கிட்னியைத் தானமாக வழங்குவதாகக் கூறி சிலர் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
மேலும், இதுதொடர்பான ஆடியோ, வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இப்புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் வினித் மற்றும் சுகாதாரத் துறை சட்டப்பிரிவு துணை இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இக்குழுவினர் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு, பல்வேறு இடங்களில் ஆவணங்கள் மற்றும் விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பாக பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கிட்னியைத் தானமாக வழங்கியவர்கள், பெற்றவர்கள் தொடர்பான பட்டியலை பெற்று அதில் உள்ள நபர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தானம் வழங்கியவரின் குடும்பம், பொருளாதார நிலை குறித்தும், தானம் வழங்க சுகாதாரத் துறையில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் விவரங்கள் சரியாக உள்ளதா? எனவும் விசாரித்து வருகின்றனர். மேலும், தானமாக பெற்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்குச் சென்றும், சிலரை சென்னை மற்றும் திருச்செங்கோட்டுக்கு வரவழைத்தும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தானம் என்ற பெயரில் பணம் பரிமாற்றம் மூலம் கிட்னி பெறப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. அதேபோல், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனைகளின் விவரங்களையும் சேகரித்துள்ளனர். அடுத்த கட்டமாக மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் எனசுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?