திண்டலில் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கும் திட்டம்: அமைச்சர்கள் சேகர்பாபு, முத்துசாமி ஆய்வு
ஈரோடு, ஜூலை 14
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இதுவரை 3,325 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளையும், 2025 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி ரூ.30 கோடி மதிப்பீட்டில் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
3,325 கோயில்களுக்கு குடமுழுக்கு
பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயிலின் திருப்பணிகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து எண்ணிலடங்கா திருப்பணிகள் பெருந்திட்ட வரைவின் வாயிலாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் எல்லாம் நிறைவுபெறுகின்ற போது மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற திருப்பணிகளை விட திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற திருப்பணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுவரை 3,325 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. அதில் 124 முருகன் கோயில்களாகும். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட 46 கோயில்களுக்கு நாளை (இன்று) குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோயில்களை எட்டும்.
ரூ.1,120 கோடி அரசு மானியம்
இந்த அரசு பொறுப்பேற்றபின், எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு 1,120 கோடி ரூபாயை அரசே மானியமாக வழங்கியுள்ளது. பெருந்திட்ட வரைவின் கீழ் பழனி கோயிலில் முதல் கட்டமாக ரூ.98 கோடி மதிப்பீட்டிலும், இரண்டாம் கட்டத்தில் ரூ.58 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூரில் உபயதாரர் நிதி, கோயில் நிதி மற்றும் அரசு நிதி ரூ.416 கோடி மதிப்பீட்டிலும், திருத்தணியில் ரூ.98 கோடி மதிப்பீட்டிலும், மருதமலை மற்றும் சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருச்செந்தூர் கோயில் திருப்பணிகளில் 70 சதவீத பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன. வரும் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்படும்.
மேலும், திருத்தணி கோயிலுக்கும் ரூ.67 கோடி மதிப்பீட்டில் மாற்றுமலைப் பாதை அமைக்கும் பணியும், சிறுவாபுரி கோயிலுக்கு ரூ.57 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வைசம், வைணவம் என அனைத்து கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு தமிழ் கடவுள் முருகனுக்கு பழனியில் மாநாடு நடத்தி பெருமை சேர்த்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.
காலம் கடந்தும் பேசும் சிலை
உலகெல்லாம் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஸ்தபதிகளை அனுப்பி பார்வையிட்டு விவரங்களை சேகரித்து மருதமலை, திண்டல் மற்றும் திமிரியில் முருகனுக்கு மிக உயரமான சிலைகளை அமைக்க உள்ளோம். இந்த சிலைகள் காலங்களை கடந்தும் முதலமைச்சரின் பெயரை சொல்லும் அளவிற்கு மிக சிறப்பாக அமையும். இந்த அரசு பொறுப்பேற்றபின், உபயதாரர்கள் மட்டும் ரூ.1400 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூரில் எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் ரூ.200 கோடிக்கும், பெரியபாளையத்தில் உபயதாரர்கள் மூலம் ரூ.120 கோடிக்கும் திருப்பணிகளை மேற்கொள்ள உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், திண்டலில் ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்க உபயதாரர்கள் பலர் நிதி வழங்க முன்வருகின்றனர். அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வகையில் திண்டலில் முருகன் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
240 அடி உயரத்தில் முருகன் சிலை
அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் மிக உயரமான முருகன் சிலை அமைக்க வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தபோது, உடனடியாக அனுமதி வழங்கினார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இந்தாண்டு அதனை சட்டமன்ற அறிவிப்பாக வெளியிட்டு ஆரம்பகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
முருகன் சிலையானது ஆசியாவிலேயே மிக உயரமாக 186 அடி உயரத்தில் சிமெண்டால் அமைக்கப்பட உள்ளது. இதன் பீடமானது 3.5 அடி உயரத்தில் கருங்கல்லால் அமைக்கப்படும். மலையில் உயரம் 50 அடியாகும். ஆகமொத்தம் மலையில் உயரத்தையும் சேர்த்து 240 அடி உயரத்தில் முருகன் சிலை அமையும். இந்த கோயிலுக்கு தற்போது வரும் பக்தர்கள் கூட்டத்தை போல் 5 மடங்கு கூட்டம் வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளும் அமைக்கப்படும்.
மேலும், இத்திருக்கோயில் சார்பில் இரண்டு திருமண மண்டபங்கள் கட்டும் பணியும், கீழேயுள்ள சிவன் கோயில் திருப்பணியும், ராஜகோபுர திருப்பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளுக்கும் தாராளமாக நிதி வழங்க உபயதாரர்கள் முன் வருகின்றனர். இத்தகைய பணிகளுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்கிய முதலமைச்சருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாநகராட்சி மேயர் எஸ்.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தகுமார், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை (உதவி ஆணையர்) இரா.சுகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.