தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 95 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டது: கவர்னர் மாளிகை அறிக்கை
சென்னை, நவ.8-–
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 95 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபையால் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டு உள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை கவர்னர் மாளிகையால் பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீத மசோதாக்கள் கவர்னரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன. அதில் 95 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 13 சதவீத மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதில் 60 சதவீத மசோதாக்கள் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர் மாதத்தின் இறுதியில் பெறப்பட்டு, பரிசீலனையில் உள்ளன. 10 மசோதாக்கள், கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்கப்பட்டன.
தமிழக மக்களின் நலனுக்காக...
இருப்பினும், இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டசபையால் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவை நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக இருந்ததாலும், அவை மாநில சட்டசபையின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்டதாலும், கவர்னர் அந்த மசோதாக்களை, ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்தார். கவர்னர் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆய்வு செய்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்குவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, மாநில மக்களின் நலன்களைக் காப்பதிலும், உண்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டுள்ளார்.
மேலும், தமிழர் பாரம்பரியம், கலை மற்றும் இலக்கியத்தை முன்னிலைப்படுத்தும் ஆன்மிக, கலாசார மற்றும் மொழி சார்ந்த முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்து வருகிறார்.
இது தமிழர் பண்பாட்டின் மீது கவர்னரின் ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது. கவர்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.