திருச்சியில் மத்திய மண்டல வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் ஆய்வுக் கூட்டம்
திருச்சி, நவ. 8 –
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR - Special Intensive Revision) 2026 தொடர்பான தேர்தல் அதிகாரிகளின் மத்திய மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெதுரு மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைய இயக்குநர் கே.கே. திவாரி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரும், அரசுச் செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் முன்னிலை வகித்தார்.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகக் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அறிவுரை: வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்கி, அவற்றைப் விரைந்து பூர்த்தி செய்து திரும்பப் பெற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டதாகத் தெரிகிறது.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான பின்வரும் முக்கிய விவரங்கள் விவாதிக்கப்பட்டன:
வரைவுப் பட்டியல்: நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். (இதில் இணையவழியில் படிவங்களைச் சமர்ப்பித்தவர்களின் பெயர்களும் அடங்கும்).
கோரிக்கை மற்றும் மறுப்புகள்: கணக்கீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்கள் டிசம்பர் 9 முதல் 2026 ஜனவரி 8ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில், படிவம் 6-ஐ பரிந்துரைக்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்துடன் சேர்த்துத் தாக்கல் செய்யலாம்.
விசாரணை: முழு விவரங்களையும் சமர்ப்பிக்காத வாக்காளர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை மேற்கொள்வார். அப்போது, வாக்காளர்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தங்களது பெயர்களை இணைத்துக் கொள்ளலாம்.
இறுதிப் பட்டியல்: அனைத்து ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் வே. சரவணன் (திருச்சி), துர்கா மூர்த்தி (நாமக்கல்), மீ. தங்கவேல் (கரூர்), பொ. ரத்தினசாமி (அரியலூர்), ந. மிருணாளினி (பெரம்பலூர்), பா. பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூர்), வ. மோகனச்சந்திரன் (திருவாரூர்), ப. ஆகாஷ் (நாகப்பட்டினம்), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.