விழுப்புரம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ராமன் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ராமன் ஆய்வு


விழுப்புரம், நவ. 8-


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளர் நலத்துறை இயக்குனருமான ராமன் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது.


கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ராமன் கூறியதாவது:-


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இ-பட்டா வேண்டுமென்று கோரிக்கை மனு வழங்கியவர்களுக்கு களஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், மாநில நிதிக்குழு மானிய திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


அதேபோல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளரச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறையினர், மழைக்காலங்களில் பாதிக்கப்பட உள்ள இடங்களுக்கு உடனடியாக சென்று பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமன் வழங்கினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியார் (பொது) யோகஜோதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன், தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%