உலகின் கடல்சார் மையமாக இந்தியாவை மாற்றுவதில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கிறது: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
சென்னை, அக்.30-
உலகின் கடல்சார் மையமாக இந்தியாவை மாற்றுவதில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
இந்திய கடல்சார் வார மாநாடு மும்பையில் 27-ந்தேதி தொடங்கியது. துறைமுகங்களை கொண்ட ஒவ்வொரு மாநிலமும் இந்த மாநாட்டில் தனித்தனி அமர்வுகளை அமைத்து தங்களின் மாநிலத்திற்கு தொழில் தொடங்க வரும்படி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. அந்த வரிசையில் தமிழ்நாடு அரசின் அமர்வு நேற்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணை தலைவர் வெங்கடேஷ் மற்றும் தமிழக அரசுத்துறையின் மூத்த அதிகாரிகள், துறைமுகங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
1,069 கி.மீ. நீளமான கடற்கரை கொண்ட இந்தியாவின் 2-வது நீளமான கடற்கரை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 3 முக்கிய பெருந்துறைமுகங்களான சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்கள் மற்றும் 17 சிறு துறைமுகங்கள், பல தொழிற்பூங்காக்கள் ஆகியவை தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
சரக்கு ஏற்றுமதி, மீன்பிடி, கப்பல் கட்டுதல், மறுசுழற்சி, கடல்சார் சுற்றுலா போன்ற துறைகளில் தமிழ்நாடு முக்கிய மையமாக மாறியுள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்குடன் பயணித்து வரும் தமிழ்நாடு அரசு, தனது கடல்சார் வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
கடலூர் துறைமுகத்தை தனியார் முதலீட்டுடன் 40 ஆண்டுகளுக்கு பிறகு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் தீவுப்பகுதியில் கடல் மார்க்க படகுப்போக்குவரத்து தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம் – தலைமன்னார் இடையே குறைந்த தூர பன்னாட்டு கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக மத்திய அரசிடம் முறையிட்டுள்ளோம். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம், சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு மின்வாரியத்திற்குத் தேவையான நிலக்கரியை கையாள 8 கி.மீ. நீளம் கொண்ட அணுகு தோணித்துறை உடன்குடியில் அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. கடலூரில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரங்கம்பாடி நாகை வேளாங்கண்ணி இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதலீட்டுக்கு மிகுந்த உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருகிறது. இந்தியாவை உலகின் கடல்சார் மையமாக மாற்றும் பயணத்தில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கிறது. தமிழ்நாட்டின் கடல்சார் வளர்ச்சி, இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.
உகந்த சூழ்நிலையை பயன்படுத்தி, உள்நாட்டு கப்பல் கட்டுதலை ஊக்குவிக்க, தூத்துக்குடி மற்றும் கடலூர் துறைமுகங்களை பயன்படுத்தும் வகையில் முக்கிய முயற்சிகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு செயல்பட தொடங்கிவிட்டது. நீலப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அனைத்து முதலீட்டாளர்களையும் தமிழகம் வரவேற்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.