ராஜன் ஒரு நெருக்கடியான வேலைக்காக இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டிருந்தான். நண்பர் ஒருவர் வார்த்தையாகவே எச்சரித்திருந்தார்:
“அந்த சாலைல லிப்ட் கேட்கிறவங்களை பாக்கறதா இருந்தா நிறுத்தாதே! நிறைய வழிப்பறி நடந்துருக்குது டா!"
ஆனால் அவசரப் பயணம். மாற்றுப் பாதை எடுத்தால் இரண்டு மணி நேரம் தாமதம். "ஒரே ஒரு நாள் தான்…" என சிந்தித்து, அந்த சாலையிலேயே பயணிக்க முடிவு செய்தான்.
முதல் இரண்டு கிலோமீட்டர் வரை அமைதியாக இருந்தது. சாலையில் ஊறிக்கிடக்கும் இருட்டு, இடையே ஒளி தரும் விளக்குகள் வெகு தூரத்திற்கு ஒன்று. அப்போது தான் எதிரே ஒரு TVS 50 வாகனம். அருகில் ஒரு சிறுவன் போல தோன்றும் இளைஞன் — இரு கரங்களையும் ஆட்டி, செல்போனின் டார்ச் ஒளியுடன் லிப்ட் கேட்கிறான்.
நண்பரின் வார்த்தை நினைவுக்கு வந்தது.
"நின்னா என்ன ஆகும்னு தெரியல… ஆனால் நிஜமாவே லிப்ட் காக நின்னு இருந்தா என்ன பண்றது இந்த இருட்டுல"
மெதுவாக வண்டியை நிறுத்தினான். வண்டியில் பில்லியனில் அமர்ந்த அந்த இளைஞன் சொன்னான்:
“சார்… ரொம்ப நன்றி. யாருமே நிப்பாட்டல. இது மோசமான ஏரியா. டிவிஎஸ் பஞ்சர். என் வீடு இரண்டு கிலோமீட்டர் உள்ளே… ஆனா காட்டுக்குள்ள நடந்து போகணும். அம்மா லுக்கு டவுனுக்குப் போய் மருந்து வாங்கணும். அதான் சார். இங்க யாரும் லிப்ட் கேட்டா நிப்பாட்ட மாட்டாங்க நீங்க தெய்வம் மாறி வந்தீங்க சார் "
"நானும் நிப்பாட்டி இருக்க மாட்டேன் ஆயிரம் திருடன் வழிப்பறி கெட்டவங்க இங்கே இருக்கலாம் ஆனால் நல்ல மனுஷன் உண்மையா உதவி கேட்கிறவன விட்டுட்டு போயிற கூடாது இல்லையா? அதனால தான் நிப்பாட்டினேன் சரிதானே "திரும்பிப் பார்த்து கேட்டான் ராஜன்
"ரொம்ப ரொம்ப கரெக்ட் சார் நீங்க மட்டும் எனக்கு இந்த ஹெல்ப் பண்ணலன்னா விடியுற வரைக்கும் இங்கே தான் நான் நின்னு இருக்கணும் "
அவன் குறிப்பிட்ட அந்த பிரிவு சாலையில் விட்டுவிட்டு, "பத்திரமாக போய்ச் சேரு" என்றான். பைக்கை கிளப்பி
அவன் இறங்கினதும், இருளில் இரண்டு நபர்கள் சூழ்ந்துகொண்டனர்:
“டா சூரி! என்னடா தேறுச்சு இவன்கிட்ட? நீ கேடி ஆச்சே பெருசா ஏதாவது அடிச்சிருப்ப ஆனால் அவன் சிரிக்க சிரிக்க பேசி உன்ன விட்டுட்டு போறான் விட்டுட்டயா?”
சூரி சிரித்தான்:
"நா எதுக்கு லிப்ட் கேட்டேன்னு தெரியல அவனுக்கு… அவன் நல்லவன் டா. அவனுக்கும் ஒரு நல்ல மனசு இருக்கு நூத்துல ஒருத்தன இப்படி ஃப்ரீயா விட்டு விடுவோம் னு தான் விட்டுட்டேன் .”
நண்பர்கள் அனைவரும் அதனை கேட்டு சிரிக்கத் தொடங்கினார்கள் நக்கல் நையாண்டியாக. “சரி விடுடா…” என கூறிக்கொண்டு சூரி ஒதுக்கமான மரத்தின் கீழ் சென்றான்.
வந்து கொண்டிருந்த ஒரு புதிய வண்டியைக் கண்ணால் பார்த்தான்.
"டார்ச் லைட் போட்டா இவன் நிப்பான்…இவன் கிட்ட கண்டிப்பா பெருசா எதையாவது போட்டுடனும்" என்று நினைத்துக் கொண்டு மொபைலை எடுக்கப் போனான்… மொபைல் இல்லை.
திகைத்தான்.
இதே சமயம், ராஜன் பைக்கை ஓட்டிக்கொண்டு சிறிய சந்துக்குள் நுழைந்தான். பைக்கை நிறுத்தி கைபையில் இருந்த மொபைலை எடுத்தான். சூரி விடம் அடித்த மொபைல்.
“புதுசா இருக்கு… நாலு நாள் தான் வாங்கி வச்சிருப்பான் போல. நல்லதொரு மொபைல்... நாலு நாள் பயன்படுத்திட்டு விக்கலாம் 40 50 ஆயிரம வரும் .”
மனதுக்குள் சொன்னான்.
இந்த நிகழ்வு நடந்த நான்காவது நாள் ராஜனை தேடி போலீஸ்காரர்கள் வந்தார்கள். போனவாரம் பஜார்ல ஒரு மொபைல் எவனா அடிச்சு இருக்கான் அந்த மொபைலை நீ தான் யூஸ் பண்ணி இருக்க எங்க அந்த மொபைல் எடுடா மொபைல"
காவலர்கள் நாலு சாத்து சாத்து மொபைலை பிடுங்கிக் கொண்டு போன போது ராஜன் நாலு நாள் இந்த போன வச்சு யூஸ் பண்ணாம உடனே வித்திருக்கணும் இப்படி மாட்டிக்கிட்டேனே." என நொந்து போனான்
தூரத்தில் இதனை பார்த்துக் கொண்டிருந்த சூரி காவலரிடம் இருந்து இந்த மொபைலை வாங்கிக் கொண்டான் நன்றி நண்பர்களே என்றான்
"மெதுவா பேசுடா நாங்க டூப்ளிகேட் போலீஸ் என்று தெரிந்துட போது நிஜமான போலீஸ் வரதுக்குள்ள உடனே இங்கிருந்து போயிடனும். இந்த மொபைலை கண்டுபிடிப்பதற்கு நான்கு நாளாக எவ்வளவு டார்ச்சர் பண்ணிட்ட சூரி "என அவர்களுக்குள் பேசியபடி அங்கிருந்த வண்டியில் ஏறி பயணித்தார்கள்.
சூரி அந்த மொபைலை ஆசையோடு தடவினான் ஏனென்றால் அவன் உழைத்து வாங்கிய முதல் பொருள் அந்த மொபைல் தான். உழைச்சி சம்பாதித்ததுனால தான் இது திரும்ப கிடைச்சிருக்கு ...
உழைத்து சம்பாதிச்சு வாங்குற பொருள், பணம், தொலைச்சா இப்படித்தான் இருக்குமோ? நாம அந்த தப்பை தானே பண்ணிக்கிட்டு இருக்கோம் இனி செய்யக்கூடாது என அந்த நொடியில் முடிவெடுத்தான் சூரி .இதனை நண்பர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் இனி இந்த சாலையில் செல்லும் யாரும் பயமின்றி செல்ல வேண்டும் என அவன் முடிவெடுத்தான்
---
🖋 ஜனனி அந்தோணி ராஜ்,
திருச்சிராப்பள்ளி