இதுவரை 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்” - ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்ட தொடக்க விழாவில் ஸ்டாலின் தகவல்
திருவள்ளூர்: 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இந்த சாதனையை செய்தது திராவிட மாடல் என்று ‘உங்க கனவ சொல்லுங்க..’ திட்டத்தை இன்று திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், அத்திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும், ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற புதிய திட்டம் தொடக்க விழா இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள, ’உங்க கனவ சொல்லுங்க..’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழக வரலாற்றில் இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு, மக்களின் கனவுகளை கேட்டு, அதையெல்லாம் நிறைவேற்ற தொடங்கும் நாளாக இந்நாள் அமைந்திருக்கிறது.
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், வளரும் வாய்ப்புகள்- வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம் -மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு- உயர்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு என, 7 வாக்குறுதிகளை அளித்தேன்.
அதையெல்லாம், தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். சொன்னால், சொன்னதை செய்பவன்தான் இந்த ஸ்டாலின். பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று சொன்னேன். இன்றைக்கு, தமிழகம் 11.19 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக இருக்கிறது. அதேபோல், விவசாயம் லாபம் தரும் தொழிலாக மாறியிருக்கிறது.
இந்தியாவிலேயே கல்விக்காக தமிழகம் செய்யும் அளவுக்கு எந்த மாநிலமும் செலவு செய்வதில்லை என்று பெருமையுடன் சொல்லும் அளவுக்கு மாதிரி பள்ளிகள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகம் இப்போது மருத்துவ சுற்றுலா மையமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும்தான் தலைநகர், முதல் நிலை நகரங்கள் மட்டுமல்லாமல், 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களும் வளர்ந்திருக்கிறது; நகரங்கள் - பேரூர்கள் மட்டுமல்லாமல், கிராமங்களும் வளர்ந்திருக்கின்றன. இது எல்லாவற்றுக்கும் மேல், சமூகநீதி அரசை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது.
பட்டியலின மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்பு நிலை மக்கள் என, எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எதிராக மட்டுமே செயல்படும் பாஜக தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. தமிழகத்துக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், மக்களின் எண்ணங்களை பிரதிபலித்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதே தன் முதல் வேலையாக வைத்துள்ளார்.
இத்தனையையும் மீறி, மக்கள் எங்கள் கூடவே இருப்பதால்தான் 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த சாதனையை செய்தது திராவிட மாடல்.
மக்கள் தேவைகளை உணர்ந்து, நல்ல பல திட்டங்களை செய்துகொண்டிருக்கும் திராவிட மாடல் அரசிடம் மக்கள் தங்களின் கனவுகளை சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான், ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்.
இன்றிலிருந்து 30 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களையும் அரசின் சார்பில் தன்னார்வலர்கள் சந்திப்பார்கள். அவர்களிடம் உங்களின் கனவுகளை சொல்லுங்கள். அதையெல்லாம் அவர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்துகொள்வார்கள். அது எல்லாவற்றையும் ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.