ஜன.28-ல் கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்; பிப்.1-ல் பட்ஜெட் தாக்கல்
Jan 10 2026
16
புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி கூடுகிறது. அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதி செய்யப்பட்ட தற்காலிக அட்டவணையை மேற்கோள்காட்டி, அதிகாரிகள் கூறி இருப்பதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி கூட உள்ளது. ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்பதால் வழக்கம்போல் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும். ஜன.28-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முப்படைகள், மீண்டும் படைக்குத் திரும்பும் பீட்டிங் ரீட்ரீட் விழா ஜன.29-ம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடாது. ஜன.30-ம் தேதி நாடாளுமன்றம் கூடும். அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. ஜன. 31 அன்று நாடாளுமன்ற இரு அவைகளும் கூடாது.
மத்திய பட்ஜெட் பிப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
குடியரசுத் தலைவரின் உரை மற்றும் மத்திய பட்ஜெட் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிறகு பிப். 13 அன்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும். ஏறக்குறைய ஒரு மாத கால ஒத்திவைப்புக்குப் பிறகு மார்ச் 9-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். கூட்டத்தொடர் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடையும்.
வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமைகளில் ஒத்திவைக்கப்படும். ஆனால், ஏப்ரல் 3-ம் தேதி புனித வெள்ளி என்பதால் ஏப்ரல் 2-ம் தேதியே நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?