வானிலை முன்னெச்சரிக்கை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

வானிலை முன்னெச்சரிக்கை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!


 

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (ஜன.10) கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தில் நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை மட்டகளப்புக்கு தென்கிழக்கே சுமார் 170 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 710 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.


இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளை பிற்பகல் அல்லது மாலை கரையை கடக்கக்கூடும்.


இதன் காரணமாக நாளை (ஜன.10) தமிழக கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 11-ம் தேதி வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


12-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


கனமழை வாய்ப்பு: திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை (ஜன.10) கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


11-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%