ஆசிய, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 8 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.40 லட்சம் ஊக்கத்தொகை: உதயநிதி வழங்கினார்
சென்னை, அக்.30–
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 3வது ஆசிய இளைஞர் விளையாட்டு தடகளப் போட்டி மற்றும் 4வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 40.50 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கி, மேலும் பல பதக்கங்கள் வெல்ல வாழ்த்து தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து அக்டோபர் 24 முதல் 26 வரை ராஞ்சியில் நடைபெற்ற 4வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் பேட்டி பிரிவில் புதிய போட்டி சாதனையுடன் தங்க பதக்கம் வென்ற தடகள வீரர்ஆர்.மானவ்வுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை,
100 மீட்டர் தடை தாண்டும் பிரிவில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கே.நந்தினிக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 4x400 மீட்டர் (கலப்பு) ரிலே பிரிவில் தங்கப் பதக்கம், 4x400 மீட்டர் (பெண்கள்) ரிலே பிரிவில் தங்கப் பதக்கம், 400 மீட்டர் பிரிவில் வெள்ளி பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடைதாண்டுதல் பிரிவில் வெண்கல பதக்கம் என 4 பதக்கங்கள் வென்ற ஒலிம்பா ஸ்டெஃபிக்கு 6,50,000 ரூபாய்க்கான காசோலை,
4x400 மீ (ஆண்கள்) ரிலே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தடகள வீரர் எம்.ஷரனுக்கு 1,50,000 ரூபாய்க்கான காசோலை, டிரிபிள் ஜம்ப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் வி. தினேஷ்க்கு 1,50,000 ரூபாய்க்கான காசோலை, உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் ஆதர்ஷ் ராமுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, நீளம் தாண்டுல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பவானியாதவ் பகவ்வுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை என தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற 7 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 15.50 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும் 3-வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் மெட்லிரிலே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற எட்வினாஜேசனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.5 லட்சம் என மொத்தம் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை துணை முதலமைச்சர் வழங்கினார்.
பதக்கங்கள் வென்ற 8 விளையாட்டு வீரர் வீரங்கனைகளுக்கு மொத்தம் தொகை 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான ஊக்கத்தொகை காசோலைகளை துணை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தடகள சங்க செயலாளர் சி.லதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.