6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றம் : சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை, ஜூலை 23–
சென்னை மாநகராட்சியில், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் பிரிமீயர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவனத்தின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் கட்டடம் மற்றும் இடிபாட்டுக்கழிவுகள் அகற்றும் பணியானது 7 மண்டலங்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற வழக்கின் காரணமாக இப்பணிகளை மேற்கொள்வதில் பெரிதும் இடர்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், இப்பணிகளை மேற்கொள்வதில் உரிய தீர்வுகண்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் செம்மைப்படுத்தப்பட்டு இப்பணிகள் கடந்த ஜனவரி 7ந் தேதி மேயரால் தீவிர கட்டடக் கழிவுகள் அகற்றும் பணி தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 17ந் தேதி முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உட்பட 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளுக்காக 15 மண்டலங்களிலும் டிப்பர் வாகனங்கள், பாப் காட் வாகனங்கள், ஜே.சி.பி. வானகங்கள், டாடா ஏஸ் வாகனங்கள், டிப்பர் லாரிகள், உள்ளிட்ட 168 வாகனங்களைப் பயன்படுத்தி சராசரியாக நாளொன்றுக்கு 1000 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. கடந்த ஜனவரி 7ந் தேதி முதல் நேற்று(22ந் தேதி) வரை 2 லட்சம் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
இந்தக் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள கட்டடக் கழிவுகள் பிரித்தெடுக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கட்டட இடிபாடுகளை அகற்றுவது சம்பந்தமாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றாதவர்களிடமிருந்து -ஜனவரி முதல் இம்மாதம் 22ந் தேதி வரை 39.30 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி இணையதளத்திலும் (https://chennaicorporation.gov.in/gcc/CandD_Waste_Management/), மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.