2 நாள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம்: திரும்ப பெறப்பட்ட 2,82,888 கணக்கெடுப்புப் படிவங்கள் தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த முகாமில், கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வருவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டார்.
இம்முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் இளம்பகவத், தெரிவித்ததாவது:-–
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் (SIR) நமது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள 14,90,000 வாக்காளர்கள் அனைவருக்குமான கணக்கெடுப்பு படிவங்கள் அச்சடிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டு இருக்கிறது. 96% க்கும் மேலான படிவங்களை வாக்காளர்களுக்கு, வாக்குபதிவு அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வழங்கியிருக்கிறார்கள்.
அந்த படிவங்களை பூர்த்தி செய்வதற்கும், திரும்ப பெறுவதற்கும் வாக்காளர்களுக்கு உதவிடும் வகையில் நேற்றும், இன்றும், சிறப்பு முகாம்களை நடத்தி இருக்கிறோம். இந்த முகாம்களில் அதிக வாக்காளர்கள், மிகவும் ஆர்வத்துடன், அவர்களுடைய விவரங்களை புர்த்தி செய்து, அந்த படிவங்களை எல்லாம் திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, நடைபெற்ற முகாம் மூலமாக 1,82,200 வாக்காளர்கள் தங்களுடைய படிவங்களை புர்த்தி செய்து, வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) கொடுத்திருக்கிறார்கள்.
யாரும் விடுபடமாட்டார்கள்
மேலும், 2 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், படிவங்களை கொடுக்காத நபர்கள் அனைவரையும், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, அவர்களின் வீடுகளுக்கு வந்து பூர்த்தி செய்து, அந்த படிவங்களை எல்லாம் மீண்டும் திரும்ப சேகரிக்கும் பணியில் ஈடுபடுவோம். முகாம்களுக்கு வராதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று படிவங்களை திருப்பி வாங்குவார்கள். மொத்தம் 3 முறை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இதுவரை 2 முறை சென்று இருக்கிறார்கள். மூன்றாவது முறை சென்று படிவங்களை திருப்பி பெற்றுக் கொள்வார்கள். ஆகையால், யாரும் விடுபடாமல் அனைத்து வாக்காளர்களின் படிவங்களும் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.
மேலும், இன்றையதினம் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த முகாமினை நேரில் ஆய்வு செய்தேன். இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் 1,00,598 கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. எனவே, 2 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமில் மொத்தம் 2,82,888 கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார். இம்முகாமில், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், வட்டாட்சியர்கள் ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, தேர்தல் வட்டாட்சியர் மற்றும் கோவில்பட்டி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.