வைணவத்தில் "பூதேவி" என்று சொல்லப்படும் பூமிப் பிராட்டியானவள் கோதை நாச்சியாராக அவதரித்த
புனிதத் தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்.
தமிழக அரசின் சின்னமாகத்
திகழ்வது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரமாகும்.
எத்திக்கும் உலகப் புகழ் பெற்ற தித்திக்கும் பால்கோவாவால் தெவிட்டாத இனிமை பேசும் ஊர்.
அன்று…
கோதை நாச்சியார் இந்த ஊரைத் தான், கிருஷ்ண அவதாரத்தில் கண்ணன் வாழ்ந்த திருவாய்ப்பாடியாக பாவித்து "பாவை நோன்பு" நோற்றாள்...
“வாங்கக் குடம் நிறைக்கும்
வள்ளல் பெரும் பசுக்கள்”
என்று பாடி,
பசுக்கள் செழித்து
பால் வளம் பெருகும் ஊராக
இந்த மண்ணை ஆதரித்து வாழ்த்தினாள்.
“கற்றுக்கறவை
கணங்கள் பல கறந்து”
என்பதால்
பசுமை, செழிப்பு,
உழைப்பின் பயன்
அனைத்தையும் சித்தரித்தாள்.
“கறவைகள் பின் சென்று
கானம் சேர்ந்துண்போம்”
என்பதால் மாடு, மனிதன், இயற்கை என ஒருங்கிணைந்து வாழும் வாழ்க்கையின் அழகான தத்துவத்தை உணர்த்தினாள்.
🌿 இன்று…
அந்த பாசுரங்கள்
வார்த்தைகளாக மட்டும் அல்ல,
வாழ்வாகவே மாறி
ஸ்ரீவில்லிபுத்தூரில்
சிறப்பாக விளங்குகின்றன.
அப்போதும்… இப்போதும்…
பால், தயிர், வெண்ணை, நெய்
அனைத்திலும் உயர்தர உற்பத்தி…
உலகத் தரம் பெற்ற
பால்கோவா, கூட்டுறவு சங்கங்கள் வழியே
இந்தியாவையும் தாண்டி
வெளிநாடுகளுக்கும்
இனிமை கொண்டு செல்கிறது.
அன்று...
பாலாக, தயிராக,
வெண்ணையாக, நெய்யாக
கண்ணனுக்கு சமர்ப்பித்த கோதை…
இன்று —
அதே பால் வளத்தில்
இனிமைக்கு இன்னும் இனிப்பு சேர்த்து,
“வையத்து வாழ்வீர்காள்!”
என்று
உலக மக்களை அழைக்கிறாள்.
“கூடியிருந்து குளிர்ந்து”
பக்தியில் நனைந்து,
“செங்கண் திருமுகத்து
செல்வத் திருமால்”
அருளைப் பெற திருப்பாவையின் தொடக்கத்திலேயே
"நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்" என்று
எல்லோரையும் அழைத்து, சேர்த்து அணைத்துக் கொள்ளும்
அந்த தாயின் கருணையே கருணை!
ஸ்ரீவில்லிபுத்தூர்...
ஆண்டாளின் அன்பில் இங்கு... பால் கூட
பாசுரம் பாடுகிறது…
இனிப்பு கூட
இறை நாமம் உரைக்கிறது...
"கூட்டிலிருக்கும் கிளியும் கோவிந்தா கோவிந்தா" என்று அழைக்கும் தேசமன்றோ நம் வில்லிபுதுவை🌸
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?