சுதா சேஷையன் அவர்கள் வழங்கியுள்ள "கால வரிசையில் பாரதி படைப்புகள்" என்னும் 23 அரிய நூல்கள் பாளை. சதக் அப்துல்லா கல்லூரிக்கு வழங்கப்பட்ட உள்ளூர் தகவல் சிறப்பானது. இது பாரதி கற்றுத் தீர முடியாத கலைக் களஞ்சியம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் OTP பெறுவதற்கு விதிக்கப் பட்ட தடை கவனம் பெறுகிறது.
ஒரகடம் மருத்துவக் கல்லுரியின் 150 இடங்கள் 100ஆகக் குறைக்கப் பட்டுள்ளதும்,
அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்பக் கோரும் தேசிய மருத்துவ ஆணையத்தின் எச்சரிக்கையும் மருத்துவத் துறை மீது கொள்ளப்படும் அக்கறையாகவே கருதலாம்.
ஜப்பானுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 21 % உயர்வு என்பதை ஆலைப் பணியாளர்கள் ஈட்டிய வெற்றி எனவே கொள்ளலாம்.
15 மெகா வாட் திறனில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கோருவது ஒளிமயமான தகவல்.
ஐ. சி. ஐ. சி. ஐ. யின் சி. இ. ஓ. சந்தா கோச்சார் 64 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. லஞ்சம் ஆழமாகத்தான் வேரோடுகிறது.
ப்ரியா நிமிஷாவுக்கான குருதித் தொகையிலும் (Blood money) மோசடியா! அடப் பாவமே!
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், ட்ரம்ப்பின் தம்பட்டத்தை மேலும் பிரகடனப் படுத்துகிறார். வெள்ளை மாளிகையில் இருண்ட மனிதர்கள்.
சண்டைப் பயிற்சியாளர் மறைந்த மோகன்ராஜ் அவர்களுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் அறிவித்துள்ள உதவித் தொகை 20 லட்சம் கருணை மனத்தின் வெளிப்பாடு. பாராட்டுக்கள்.
மிருகம், பறவை, தாவரம் போன்ற இயற்கை உயிரிகளை வரிசைப்படுத்தி மனிதன் வேற்றுமைகளைக் களைய வேண்டியதன் அவசியத்தை அழகிய கவிதையாக வடித்துள்ள திரு. வே. கல்யாண் குமார் அவர்களுக்கு ஒரு சபாஷ்!
திமிரி. ந. வீரா அவர்களின் கவிதை சிறந்த கற்பனைத் திறனின் வெளிப்பாடு.
சிகாகோ திரு.கோபு அவர்களின் "மீனெல்லாம் மீனல்ல" குறும்புக் கவிதை ஒரு கரும்புக் கவிதையாக
நகைச்சுவை மிளிரும் நல்ல படைப்பு. கவிதையில் உள்ள Fish oil ஐக் கொட்டிவிட்டு மீன் எண்ணெய் என்ற அழகிய தமிழ்ச் சொல்லால் நிரப்பியிருக்கலாமே.
"கண்ணுறங்கு கண்மணியே" கவிதையில் மழலை முதல் முதியோன் வரையான மனிதனின் வளர்ச்சியை வரிசைப்படுத்திக் கவி புனைந்த நெல்லை. தி. வள்ளி அம்மையாரின் திறமை குறிப்பிடத் தக்கது.
காளிதாசன் - சரஸ்வதி தேவியின் அறிவார்ந்த உரையாடலை அற்புதச் சொற் சித்திரமாக வடித்துள்ள சிவ. முத்து லட்சுமணன் அவர்களின் படைப்பு "நீ மனிதனாகவே இரு" வழக்கம்போல் சிக்ஸர் தான்.
திருச்சி. கணேசன் அவர்களின் கங்கையின் பாவங்கள் குறித்த படைப்பு சுவாரஸ்யமான தொன்மம். கதையைக் கொண்டு செலுத்திய நேர்த்தி அருமை.
வாசகர் கடிதம் வாசகர்கள் தமிழ்நாடு இ இதழை எவ்வளவு சிரத்தையோடு உள்வாங்குகிறார்கள் என்பதைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. தென்காசி. திரு. வெங்கடாசலம் அவர்கள் காதநாயகனின் பெயர் சுயம்பு எவ்வளவு பொருத்தம் என்று கடிதத்தில் சுட்டியிருக்கும் நுட்பம் வாசகர் கடிதம் ஒரு நுண்ணோக்கி (microscope) என்றே சொல்லவைக்கிறது.
இதழில் நிறைந்துள்ள இதர அம்சங்களையும் இதுபோல் விரிவாக சொல்லிக்கொண்டே போகலாம்.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றிகள்.
P. கணபதி.
பாளையங்கோட்டை