வாசகர் கடிதம் (.சின்னஞ்சிறுகோபு)

வாசகர் கடிதம் (.சின்னஞ்சிறுகோபு)


   இதோ இப்போதுதான் வெளிவந்தது போலிருக்கு! அதற்குள் தமிழ்நாடு இ.பேப்பர் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறதா! நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது! இந்த பத்திரிகை இப்படியே அற்புதமாக தொடர்ந்து வெள்ளி விழா, பொன் விழாவெல்லாம் கொண்டாட வாழ்த்துகிறேன்.


ஜனனி அந்தோணி ராஜின் 'மனிதம் விற்பனைக்கு இல்லை' என்ற சிறுகதை அந்த கடைக்காரரின் மனிதாபிமானத்தை உணர்த்தியது. வியாபாரம் முக்கியம்தான். அதுபோல மனிதமும் முக்கியம்தான் என்று நினைக்கிற இந்த கடைக்காரர்போல நிறையபேர் இருந்தால், நாடு இன்னும் அன்பால் சிறக்கும்.


  நல. ஞானபண்டிதனின் 'பித்துக்குளி' என்ற சிறுகதை படிக்க பாவமாக இருந்தது. ஆனாலும் இதைப்போன்றவர்களிடம் இரக்கப்பட்டு, துன்புறுத்தாமல் உணவளிப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.


  நான்கின் பெருமையை முத்து ஆனந்த் சொல்லிய பிறகுதான் நான்கிற்கு இவ்வளவு பெருமைகள் இருக்கிறதாயென்று தோன்றியது. கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போதுதான் ஒன்று, இரண்டு, மூன்று போன்ற மற்ற பல எண்களுக்கும் இப்படி பல பெருமைகள் இருக்கும் என்று தோன்றுகிறது. முத்து ஆனந்த் அவைகளையும் சிந்தித்து எழுதவேண்டும்!


  சுதந்திரப் போராட்டவீரர் எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா நாட்டின் மீதும், மகாத்மா காந்திஜி மீதும் வைத்திருந்த அன்பும் மதிப்பும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இவர் காந்தியடிக்கு தங்கத்தினால் ஆன கைராட்டையை பரிசாக அளிக்க, அதை காந்திஜி அவர்கள் ஏலத்துக்கு விட, அதை இவரே அதிக விலைக்கொடுத்து வாங்கிய நிகழ்ச்சி அவரின் பெருமையை உணர்த்தியது.


  'ஒன்றை எவ்வழியிலேனும் ஒன்பதாக்கினால் சாமர்த்தியம்... எவர்குடி கெடுத்தேனும் தம்குடி வளர்த்தால் திறமைசாலி...'என்று அடுக்கடுக்கான உதாரணங்களுடன் சொல்லி, 'இதுதான் இன்றைய உலகம்' என்று படம் பிடித்து காட்டிய ஹரணியை பாராட்டுகிறேன். இந்த கவிஞர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!


  செல்போனில் உள்ள தகவல், மாட்டு வண்டி ஆகிய கட்டுரைகளும், புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? பாம்பும் விவசாயியும், உடைந்த பானை ஆகிய கதைகளும் படிக்க சுவையாக தமிழ்நாடு இ.பேப்பரின் சிறப்பை உணர்த்துவதாக இருக்கிறது.


  -சின்னஞ்சிறுகோபு,

    சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%