இளைஞனே...* *இன்னொரு கீதை

இளைஞனே...*  *இன்னொரு கீதை

*இளைஞனே...*

*இன்னொரு கீதை!*


இளமை ஊஞ்சல் ஆடும்

என்னினிய இளைஞனே!

இமயத்தையே

இடம் பெயர வைக்கும் 

இளம் புயலே..

இன்று மட்டுமல்ல 

என்றென்றும் 

நீ தான் 

சகலமும் நிறைந்த 

சமூகத்தை 

சீராய் இயக்கும் 

சக்தி மிக்க இதயம்...

எக்கணமும் மறவாத 

எழுச்சி மிகு துடிப்பு தானே 

இதயத்தின் சுவாசம்! 

அதனால் தான் உன்னை

சமூகத்தின் இதயம் என்றேன்...

முரண்களும்

முணு முணுப்புகளும் 

மூர்க்கத் தனத்தில் 

முறையற்று முளைத்து

தழைத்தோங்கி வளர்ந்து 

வெறும் முள் காடாய்ப் போன 

வாழ்க்கை இது...நீ 

எதிர் கொள்ளும் 

அனைத்தையும், 

ஏற்றமோ இறக்கமோ

சிகரமோ சரிவோ

சந்தோஷமோ சோகமோ 

உச்சமோ பள்ளமோ 

எல்லாவற்றையும் 

இன்முகம் காட்டி 

 எழுச்சி கூட்டி

சவாரி செய்யவும் 

சங்கடம் அளிப்பதை

சங்கடம் பாராமல் 

துவம்சம் பண்ணி

சமாதி செய்யவும் தயங்காதே!

காரணம்... 

தக தகக்கும் 

தங்கச் சூரியன் நீ!

விழித்து நீ எழுந்தால் 

விலங்குகளே அப்பளமாய் நொறுங்கிப் போகுமே!

தூய உள்ளத்தோடு

துணிந்து விட்டால் 

உனக்குத் துக்கமேது?

துயரமேது?

வளமும் பலமும்

நலமும் நிறைந்து 

விளைந்து பொலியும் 

வாலிபம் உனக்கு 

வல்லமை மிக்க வரம்

என்பதை ஒரு போதும் 

மறந்து விடாதே!

காதலையும் 

காமத்தையும் 

பிரித்துப் பகுத்துப் 

பார்க்கும் பக்குவம் 

வசப்படாத இந்த 

வாலிபப் பருவம் 

சில நேரங்களில் 

சிரமத்தின் சிகரம் 

சிக்சர் அடித்து 

சந்தோஷ உச்சமும் தரும்...

கிளீன் போல்டாக்கி

கீழேயும் தள்ளி விடும்.

ஜாக்கிரதை மட்டும் 

போதாது இளைஞனே,!

கணப் பொழுது கூட 

அஜாக்கிரதையை 

அனுமதித்து விடாதே!

உணர்வுப் பல்லக்கில் 

என்றென்றும் 

பாதுகாப்பாய் பவனி வர 

இன்னொரு முக்கிய 

உபாயம் ஒன்றுண்டு...

கவனமாய்க் கேட்டு 

கருத்தில் கொள்...

காலமெல்லாம் கை கொடுக்கும்...

கஷ்டத்தை யெல்லாம் 

காணாமல் போக வைக்கும்...

நீ தனி மனிதன் இல்லை 

தரணி மனிதன்...

மானுட சமுத்திரத்தில்

இருந்து 

மறைந்து வாழ முடியாது...

கலந்து இணைய வேண்டிய 

கட்டாயம் இங்கே 

எல்லோருக்கும் தான்...

எந்த இயக்கத்துக்கும் 

நுட்ப அலைவரிசை உண்டு என்பதை 

உள்ளார்ந்த தேடலில் 

உணர்ந்தால்

உயரலாம் உய்யலாம்...

என்னினிய இளைஞனே!

கலப்பதிலும் நுட்பத் திறன் உண்டு காண்...

கலப்பதில் 

களிப்பு மிகுந்து விட்டால் 

கரைந்து காணாமல் போய் விடும் அபாயம் உண்டு...

இதை அறிந்து கொள்வதோடு 

அஜாக்கிரதையை

முற்றிலும் தவிர்...

எந்த உறவானாலும் சரி...

தேனில் விழுந்த ஈயாய் 

இழைந்து விடாதே

கற்கண்டின் மேல் 

கனிவாய் மென்மையாய் மேயும் 

ஈயாய் இரு...

கரைதல் இல்லாமல் 

கலத்திலில் இருந்து 

கரையேறி விடலாம்.

இறுதியாய் ஒரு வார்த்தை 

இளைஞனே!

மானுட சமுத்திரத்தில் 

கலத்தல் இல்லாமல் 

வாழ்க்கை இல்லை...

கரைந்து போனால் 

வாழ்க்கை தொல்லை!



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%