மலேசியா அருகே கடலில் படகு மூழ்கி 7 அகதிகள் பலி

மலேசியா அருகே கடலில் படகு மூழ்கி 7 அகதிகள் பலி


லங்காவி, நவ. 10–


மலேசியா அருகே கடலில் படகு மூழ்கியதில் 7 அகதிகள் உயிரிழந்தனர்.


மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டனர்.


தாய்லாந்து – மலேசியா எல்லைக்கு அருகில் அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர். மலேசியா அருகே கடல் பகுதி எல்லையான லங்காவி அருகே சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் கடலில் மூழ்கினார்கள்.


இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.


பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்து உள்ளது.


மேலும் படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் உயிர் பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்ற 2 படகுகளும் எங்கு சென்றது என்பது குறித்து தெரியவில்லை. அந்த படகுகளை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%