மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைத் திறப்பு

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைத் திறப்பு


மண்டல பூஜை, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்த போது, பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் 1-ந் தேதி இந்த சீசன் தொடங்கி 60 நாட்கள் நடைபெறும்.


அந்த சீசனில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விரதமிருந்து இருமுடி கட்டியபடி பயபக்தியுடன் வருவார்கள். சபரிமலையில் எங்கு பார்த்தாலும் சரணகோஷம் எதிரொலிக்கும்.


அத்தகைய சிறப்புமிக்க நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.


இதனை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி சன்னிதானத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட விளக்கு தீபத்தை வைத்து தீமூட்டினார். பின்னர் 18-ம் படிக்கு கீழ் இரு முடி கட்டுகளுடன் காத்திருந்த சபரிமலை புதிய மேல்சாந்தி பிரசாத், மாளிகப்புரம் மேல் சாந்தி மனு ஆகியோரை 18-ம் படி வழியாக அருண்குமார் நம்பூதிரி சன்னிதானத்திற்கு அழைத்து வந்தார்.


புதிய மேல் சாந்திகள் பிரசாத் நம்பூதிரி, மனு நம்பூதிரி ஆகியோருக்கு மூலம் மந்திரம் சொல்லி கொடுத்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு புனித நீர் ஊற்றிஅபிஷேகம் நடத்தினார். இந்த நடைமுறையை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் பகுதியில் இருமுடி கட்டுகளுடன் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.


கார்த்திகை 1-ந் தேதியான இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடு தொடர்ந்து நடைபெறும். அந்த வகையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 11 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.


மீண்டும் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.


சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசனம் மூலம் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். அந்த வகையில் தினமும் 90 ஆயிரம் பேர் ஐயப்பனை தரிசிக்க உள்ளனர். இதில் 1 மாத காலத்துக்கான முன்பதிவு இப்போதேமுடிவடைந்து விட்டது. இதனால் உடனடி தரிசன முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.


மேலும் பக்தர்களுக்காக இதுவரை 60 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. மரக்கூட்டம் முதல் வலியநடை பந்தல் வரை பக்தர்கள் வரிசையாக நிற்கும் இடங்களில் தடுப்பு கம்பிகள் வழியாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சரம் குத்தி முதல் சன்னிதானம் வரை 60 இடங்களில் சுக்குநீர் வினியோகம் 24 மணி நேரமும் நடைபெறும்.


சிறப்பு பேருந்து சேவை


தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேற்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15–ந்தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கோயம்பேடு, கிளாம்பாக்கத்திலிருந்து பம்பைக்கு நேற்று தலா 2 பேருந்து சேவைகளும், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஒரு பேருந்து சேவையும் தொடங்கப்பட்டன. தமிழகத்தி லிருந்து 100 பேருந்துகள் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லவிருக்கும் ஐயப்ப பக்தர்கள் அரசு விரைவு போக்குவரத்துக்கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News