பொசுங்கட்டும் போகியில்

பொசுங்கட்டும் போகியில்


மனசுக்குள்ளே அமில அழுக்குகள்

சுமந்திடும் மனிதனின் யாக்கை.


அதை ஞானக்கண்களில்

தேடி எரித்தால்

*போகியில் புனிதம்* அடைந்திடும்

வாழ்க்கை.


ஈட்டிமுனைகள் தாக்கும்போதும்

அன்பின் குடை நீட்டிவிடு மனமே.


வாய்க்கரிசி வீழும் போதும்

வாழ்த்தியே

அட்சதையைத் தூவிடு தினமே.


எவர்மீதும் குறைகாணும்

குறைகுடமாய் வாழ்க்கை.


வேரினிலே சுடுநீர் ஊற்றி

வெறி தீர்க்கும் வேட்கை.


தீதொன்றும் பிறராலே

தீப்பற்றித் தொடராது.


யாவும் நாம் செய்கின்ற

செயலன்றி வேறேது?


அடுத்தவர் 

பொருளுக்கு ஆசை வைக்கும்

திருட்டுத்தனமும் எதற்கு?


கிடைத்ததை எல்லாம்

சுருட்டிக்கொள்ளும்

வெக்கக்கேடே இழுக்கு.


சதையாய்ப் பெண்ணைப்

பார்க்கின்ற 

சபலத்தை வெளியே விரட்டு.


சந்திக்கின்ற மனிதரையெல்லாம்

சமமாய் முதலில் நடத்து.


சாட்சி இல்லா 

சந்தர்பங்களிலே

வழுக்காதிருக்கட்டும் ஒழுக்கம்.


ஏய்த்துப்பிழைக்கும்

மனிதரைப் பார்த்து

விலங்குகள் விழுந்தே சிரிக்கும்.


ஆசை ஒன்றும் தவறில்லை

பேராசைக்கு என்றும் மருந்தில்லை.


பேசும் வார்த்தையில்

கவனம் வைத்தால்

துன்பம் தேடியே வருவதில்லை.


உயிர்களின் கருப்பையைச்

சிதைக்காமல்

நிறையட்டும் மனித இரைப்பை.


இறைவனும் விழுந்து

வணங்கும் உயர்வே

உழுதிடும் உழவனின் கலப்பை.


சாதியும் மதமும் 

சிலுவை ஆணிகள்

பெயர்த்து வெளியே வீசிவிடு.


அன்பு ஒன்றே 

உயிர்களை இணைக்கும்

இதயம் திறந்தே பேசிவிடு.


விரிந்த பூக்களின் 

வாசம் போல

இதழ்களில் சிரிப்பை எழுதிவிடு.


பிறந்து வந்த குழந்தையைப்போல

களங்கம் இன்றி தெளிந்துவிடு


பொதுவாய்ச் சுழலும்

பூமியைச் சமமாய்

உயிர்களுக்கெல்லாம் பங்கிடு.


இயற்கையை உயிராய்

நேசிக்கின்ற

இதயமே இறைவன் கும்பிடு.


நறுமுகை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%