பாலீஸ் வாசனை

பாலீஸ் வாசனை



மதன் வழக்கம் போல் அந்த இடத்தில் தன் பைக்கை நிறுத்தி, சக்கரம் பொருத்தப்பட்ட ஒரு பழைய பலகையில் அமர்ந்தபடி 'பாலீஸ்… பாலீஸ்…” எனக் கத்திக் கொண்டிருக்கும் இளைஞனிடம் தன் ஷூவுக்குப் பாலீஸ் போடுவான்.


 அவனுடன் வந்த சிவா கேட்டான். "இது வீண் செலவு... பேசாம பாலீஸ் டப்பாவும், பிரஷ்ஷும் வாங்கி நீயே தேய்ச்சுக்கலாம்!"


மதன் சிரித்தபடி கேட்டான். ''நீ அந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தியா?”


சிவா அப்போதுதான் பார்த்தான்.

இடுப்பிற்குக் கீழே இரண்டு கால்களுமே சூப்பை.


“இவன் இதைக் காட்டிப் பிச்சை எடுக்கலாம்!...நிறைய பிச்சை விழும்!

ஆனா... அவன் அப்படிச் செய்யலை... உழைக்க நினைக்கிறான்... அந்த எண்ணத்துக்காகத்தான்

நான் தினமும் இவன்கிட்ட பாலீஸ் போடுறேன்.”


அன்று முதல் சிவாவும்

அவனிடமே பாலீஸ் போட ஆரம்பித்தான்.


ஒரு நாள்.

அந்த இளைஞன் அங்கு இல்லை.

மறுநாளும் அதேபோல்.


“ஏதாவது ஆயிருக்கும்,”

சிவா சொன்னான்.


முன்று மாதங்களுக்குப் பிறகு, மதன் ஒரு புதிய கம்பெனிக்கு

இன்டர்வ்யூக்கு சென்றான்.


ரிசெப்ஷன் கவுண்டரில்

ஒரு இளைஞன். சுத்தமான சட்டை. டை, கண்ணியமான முகம்.


அவன் புன்னகையோடு கேட்டான். "சார் நல்லாயிருக்கீங்களா?”


மதன் விழிக்க, கவுண்டருக்குப் பின்னிருந்து வெளியே வந்தான் அந்த இளைஞன், செயற்கைக் கால்களுடன்.


அதே பாலீஸ் இளைஞன். மதன் வார்த்தை இழந்தான்.


“என்ன சார் சர்ப்ரைஸா இருக்கா?..... ஒரு NGO ஸ்பான்சர்ஷிப் பண்ணினாரு...இந்தக் கால்களைப் பெற்றேன்!....அதுக்கப்புறம் ஒரு கோர்ஸ் படிச்சேன்... இங்கே ரிசப்ஷனிஸ்ட் வேலை கிடைச்சுது.”


சிவா மெதுவாகக் கேட்டான்.


“அப்ப… நீ ஏன் அப்போ பாலீஸ் போட்டுக் கொண்டிருந்தே?”


இளைஞன் சிரித்தான். "பிச்சை கேட்டா உதவி கிடைக்கும்.

ஆனா உழைப்பை காட்டினா

வாய்ப்பு கிடைக்கும் அல்லவா?.”


மதன் தன் ஷூவை பார்த்தான்.

அதன் பாலீஸ் வாசனையில் ஒரு 

முன்னேற்றத்தின் சாட்சியும் இருந்தது.



(முற்றும்)

முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%