நிழல்கள்

நிழல்கள்


சென்னையின் அந்த நட்சத்திர ஹோட்டல் வளாகமே மின்னொளியில் ஜொலித்தது. அது தென்னிந்தியாவின் மிகப்பெரியத் திரையுலக விருது வழங்கும் விழா. சிவப்பு கம்பள வரவேற்பில் முன்னணி நட்சத்திரங்கள் அணிவகுத்தனர்.

ஒதுக்கப்பட் ஒரு மூலையில், தன் இருக்கைக்காகக் காத்திருந்தான் சஞ்சய். அவன் ஒரு வளர்ந்து வரும் நடிகன். சில படங்களில் 'வெளிநாட்டு மாப்பிள்ளை', 'டாக்டர்' போன்ற சிறு வேடங்களில் நடித்திருப்பவன். அந்த விழாவிற்கு வந்திருந்த தனது ஆதர்ச நாயகனான மெகா ஸ்டார் அர்ஜுனை ஒருமுறை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் அவன் இருந்தான்.

விழாவின் இடைவேளையில் அர்ஜுன் மேடையிலிருந்து இறங்கித் தனது கேரவனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பவுன்சர்கள் சூழ அவர் வரும் கம்பீரம் அனைவரையும் மிரள வைத்தது. சஞ்சய் ஆர்வத்துடன் தட்டுத்தடுமாறி அருகில் சென்றான், "சார்... நான் சஞ்சய்... உங்க கூட ஒரு சீன் நடிச்சிருக்கேன்..." என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், ஒரு பவுன்சர் அவனைச் சற்றும் மதிக்காமல் ஒரு தள்ளு தள்ளினார். அர்ஜுன் எதையும் கவனிக்கவில்லை. கறுப்புக் கண்ணாடி அணிந்த அவரது கண்கள் யாருக்காகவும் தாழவில்லை. அந்த இடமே அதிரும் வகையில் தன் ரசிகர் பட்டாளத்தைச் சிலாகித்துவிட்டுத் தன் சொகுசு காரில் ஏறிப் பறந்தார் அந்த மகா நடிகர்.

சஞ்சய் வேதனையோடு ஓரமாய் நின்றான். 'உச்சத்தில் இருக்கும்போது சக கலைஞனை மதிக்கும் பண்பு அற்றுப் போகுமோ?' என்ற கேள்வி அவன் மனதை வாட்டியது. விழா முடிந்து வெளியே வந்தபோது, "சார்... நீங்க சஞ்சய் தானே? அந்தப் படத்துல உங்களைப் பார்த்திருக்கோம் சார்!" - இரண்டு இளைஞர்கள் ஓடி வந்து அவனை வழிமறித்தனர்.

"சார், உங்க கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?" என்று அவர்கள் கேட்டபோது சஞ்சய்யின் வேதனையெல்லாம் காற்றில் கரைந்தது. அர்ஜுன் கொடுக்காத அந்த ஒரு நொடி அங்கீகாரத்தை, அந்தச் சாதாரண ரசிகர்கள் அவனுக்குக் கொடுத்தனர். அவர்களோடு சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டான் சஞ்சய்.

பதினைந்து ஆண்டுகள் கழித்து...

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. அதே போன்ற ஒரு பிரம்மாண்ட விருது வழங்கும் விழா. இன்று அந்த இடத்தில் நிற்பது அதே சஞ்சய். இன்று அவன் சாதாரண நடிகன் அல்ல, பல கோடி ரசிகர்களைக் கொண்ட 'வசூல் சக்கரவர்த்தி' சஞ்சய்.

விழா முடிந்து அவர் சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும்போது, கூட்டத்தில் ஒரு நரைத்த முடி கொண்ட முதியவர் கையை நீட்டி ஏதோ சொல்ல முயன்றார். பவுன்சர்கள் அவரைத் தூக்கி எறிய முயன்றனர். ஆனால், சஞ்சய் சட்டென்று நின்றார். அந்த முதியவரை அருகில் அழைத்து, கனிவோடு அவர் தோளில் கை போட்டு ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அவர் காரில் ஏறி அமர்ந்ததும், அருகிலிருந்த மேலாளர் கேட்டார், "ஏன் சார், அந்தப் பெரியவருக்காக இவ்வளவு நேரம்? நமக்கு ஏற்கனவே அடுத்த மீட்டிங் லேட் ஆகுது."

சஞ்சய் அமைதியாகச் சொன்னார், "அவர் யாருன்னு உங்களுக்குத் தெரியாது. அவர்தான் ஒரு காலத்துல உச்ச நட்சத்திரமா இருந்த அர்ஜுன். அன்னைக்கு இதே இடத்துல இதே விழாவுல அவர் என்னை அலட்சியப்படுத்திட்டுப் போனார். ஆனா இன்னைக்குத் தன் பேரப் பையனுக்காக என்கிட்ட ஒரு செல்ஃபி எடுக்க பல மணிநேரம் காத்திருந்திருக்கார்."

மேலாளர் அதிர்ந்து போனார். சஞ்சய் தொடர்ந்தார், "அன்னைக்கு அவர் பண்ணின தப்பை நான் இன்னைக்குப் பண்ணல. பதவி வரும்போது பணிவு வந்தாதான், புகழுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். அன்னைக்கு அர்ஜுன் செஞ்ச அலட்சியம் தான் இன்னைக்கு என்னைப் பக்குவப்பட்ட கலைஞனா மாத்திருக்கு!"

சஞ்சய் காரின் கண்ணாடியைத் தாழ்த்தி, கூட்டத்தில் நின்றிருந்த அந்தப் பழைய நடிகருக்கு ஒரு மரியாதையான வணக்கத்தைத் தந்துவிட்டு நகர்ந்தார். புகழ் உயரம் வெற்றி இவை எல்லாம் வெறும் நிழல்கள் மட்டுமே என்பதை சஞ்சய் உணர்ந்து இருந்தான். முன்னாள் ஸ்டார் அர்ஜுன் அவர்களுக்கும் நிச்சயமாக காலம் உணர்த்தி இருக்கும்.


ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%