பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு அவசியம்: நாகர்கோவில் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் நீதிபதி விக்டோரியா கௌரி உரை

பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு அவசியம்: நாகர்கோவில் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் நீதிபதி விக்டோரியா கௌரி உரை



நாகர்கோவில், ஜன. 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிரஸ் கிளப்பின் 22-வது ஆண்டு விழா, 2026-ஆம் ஆண்டு டைரி வெளியீட்டு விழா மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கான பாராட்டு விழா என முப்பெரும் விழா, ஆரல்வாய்மொழி பைபாஸ் சாலையில் உள்ள கார்னிவல் சிட்டியில் நடைபெற்றது.


இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி விக்டோரியா கௌரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். ஜாய் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜாய் ராஜா, தினமுரசு நாளிதழ் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.


விழாவில் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, குமரி மாவட்டத்தில் படித்தவர்கள் அதிகம் உள்ள நிலையில், அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளைப் பெறும் வகையில் சிறப்பாகச் செயல்படும் ஆட்சியர் அழகுமீனா மற்றும் குற்றங்கள் குறையும் வகையில் பணியாற்றி வரும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடத்துவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். குமரி மாவட்டத்தின் சுகாதாரம் முன்னேறியுள்ளதாகவும், குறிப்பாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையின் சேவைகள் தற்போது மிகச் சிறப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


போக்சோ விழிப்புணர்வு:


பள்ளிகளில் போக்சோ (POCSO) சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை நீதிபதி வலியுறுத்தினார். நீதிமன்ற வழக்குகளைக் கையாளும் போது, 13 மற்றும் 14 வயது பெண் குழந்தைகள் கையில் குழந்தையுடன் வருவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். அதேபோல், குற்றவாளியாகக் கொண்டு வரப்படுபவர்கள் பெரும்பாலும் 21 வயது பூர்த்தியடையாத இளைஞர்களாக உள்ளனர். தாங்கள் செய்யும் குற்றத்தின் விளைவு தெரியாமல் இவர்களது வாழ்க்கை சிக்கலாகிறது. எனவே, பள்ளிக்கு வராத குழந்தைகளைக் கண்டறியும் நிமிர் திட்டத்தில், இத்தகைய சட்ட விழிப்புணர்வையும் சேர்த்துக்கொள்ள ஆலோசிக்க வேண்டும் என்றார்.


குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது, இத்தகைய சூழலில் உள்ளவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்பது சிக்கலான விஷயம் என்றும், இதனை மாநில அளவிலான விழிப்புணர்வு இயக்கமாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் பேசினார்.


கலெக்டர் பேச்சு:


இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, குமரி மாவட்டத்தில் அரசு அலுவலராகப் பணியாற்றுவது சவாலானது என்றும், மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் அரசுத் திட்டங்களைச் சரியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தங்களின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.


காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேசுகையில், ஜனநாயகத்தின் தூண்களான காவல்துறையும் பத்திரிகைத் துறையும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.


முன்னதாக, பிரஸ் கிளப் செயலாளர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். தலைவர் மதன், செயற்குழு உறுப்பினர் தாகூர், உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.




Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%