நீலகிரி மாவட்டத்தில் வேளாண் மதிப்பு கூட்டு மையம் அமைக்க ரூ.1 கோடி மானியம்
நீலகிரி, நவ. 7–
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வேளாண் விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக மதிப்புக் கூட்டு மையங்கள் அமைக்க நீலகிரி மாவட்டத்திற்குரூ 1 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், ரூ.10 கோடி வரையிலான புதியதிட்டங்களுக்கு முதலீட்டு மானியம் 25 சதவீதமும், பெண்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு (சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அட்டவணைப்படி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதுதவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டமானது, அனைத்து மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண், தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம்நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்கவேண்டும்.
திட்டமதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5% ஆக இருக்கவேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கிக்கடனாகப் பெறப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் வங்கியில் கடன் ஒப்புதல் பெறப்பட்டபின், அவர்களுடைய விண்ணப்பங்களை மாவட்டம் மற்றும் மாநில அளவிலான குழு மதிப்பாய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு அவர்களின் தொழில் திட்டத்திற்கேற்ப மானியத்தொகை அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வழங்கப்படும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு 5% வட்டி மானியம் வழங்கப்படும். மானியத்தொகையானது, வேளாண் தொழில் முனைவோர்களுக்கு ஒரே தவணையாக (100%) அவர்களின், வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும்.
வரப்பிரசாதம்
ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் ஏற்கெனவே நிதிஉதவி பெற்றபயனாளிகளும் இத்திட்டத்தில் பயன் பெற தகுதியுடையவர்கள்.
இத்திட்டம் வேளாண் தொழில்முனைவோர்களுக்கு ஒருவரப்பிரசாதம் ஆகும். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தொழில் முனைவோர்கள், மகளிர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆர்வமுள்ள நபர்கள் உதகை ரோஜாப் பூங்காவில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்கள்.