3-வது 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலைவாசஸ்தலமான இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நேற்றிரவு நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட் செய்ய பணித்தார். அப்போதே பனிப்பொழிவும் தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் ேவகப்பந்து வீச்சாளர் அர்ஷதீப்சிங்கும், ஹர்ஷித் ராணாவும் ஸ்விங் தாக்குதலில் மிரட்டினர். ரீஜா ஹென்ரிக்ஸ் (0), குயின்டான் டி காக் (1 ரன்) இருவரையும் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றினர். டிவால்ட் பிரேவிஸ் (2 ரன்), டிரிஸ்டான் ஸ்டப்சும் (9 ரன்) நிலைக்கவில்லை. 30 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தென்ஆப்பிரிக்க அணி ஊசலாடியது.
ேகப்டன் எய்டன் மார்க்ரம் மட்டும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். அதிகபட்சமாக மார்க்ரம் தனது பங்குக்கு 61 ரன்கள் (46 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி அபிஷேக் ஷர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி அட்டகாசமாக தொடங்கி வைத்த அபிஷேக் ஷர்மா தொடர்ந்து மட்டையை சுழட்டினார். அபிஷேக் ஷர்மா 35 ரன்களில் (18 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். சுப்மன் கில் 28 ரன்களிலும் (28 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஷிவம் துபே சிக்சர், பவுண்டரியுடன் இன்னிங்சை தித்திப்பாக முடித்து வைத்தார்.
இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா (26 ரன்), ஷிவம் துபே (10 ரன்) களத்தில் இருந்தனர். அர்ஷ்தீப்சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 2-–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இவ்விரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி லக்னோவில் நடக்கிறது.
ஹர்திக் பாண்ட்யா சாதனை
இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார். இது அவரது 100-வது (123 ஆட்டம்) விக்கெட்டாகும். இந்த மைல்கல்லை எட்டிய 3-வது இந்தியர். ஏற்கனவே அர்ஷ்தீப்சிங் (109 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (101 விக்கெட்) ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.