திருப்பதியில் ரூ.35,000 கோடியில் ஆன்மிக நகரம் - 1,400 ஏக்கரில் அமைக்கிறது ஆந்திர சுற்றுலா துறை
திருப்பதி: ஆந்திராவில் 5,000 ஆண்டு இந்து மதக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ரேணிகுண்டாவில் ஆன்மிக நகரம் அமைகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனையின்படி, டெல்லா டவுன்ஷிப் நிறுவனம் திருப்பதியில் ஆன்மிக நகரத்தை உருவாக்க முன்வந்துள்ளது. இந்து மதக் கலாச்சாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதே இதன் நோக்கம். சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான இந்து மதக் கலாச்சாரம் தொடக்கம் முதல் வருங்கால சந்ததியினரும் அறியும் வகையில் இந்நகரம் அமைகிறது.
சனாதன தர்மம் என்பது என்ன? அதன் தனித்துவம் என்ன? இதன் நோக்கம் என்ன? இது தோன்றிய வரலாறு, கலாச்சாரம், ஐதீகம், இந்துக்களின் பழக்க வழக்கங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வாறு மாறுபடுகிறது என்பது போன்ற விளக்கங்களுடன் இந்நகரம் பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் உட்பட பல்வேறு இதிகாசங்கள், இந்து புராணங்கள் இருக்கும் வகையில் இந்த ஆன்மீக நகரம் அமைக்கப்பட உள்ளது.
இந்துக்களின் மெய்ஞான அறிவு, சூரியனை சுற்றிதான் கிரகங்கள் சுழல்கின்றன என்ற அறிவு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கத்தை கணித்த திறன், கலாச்சாரம், ஆச்சாரம் போன்றவற்றை தெரிவித்து நாடு முழுவதிலும் உள்ள இந்துக்களை ஒன்றுபடுத்துவதை திட்டமாக கொண்டு இந்த ஆன்மிக நகரம் உருவாக்கப்படுகிறது. இங்கு 300 ஏக்கரில், ‘வாழ்வியல் கண்காட்சி நகரம்’ உருவாக்கப்பட உள்ளது.
வேதத்துக்கென தனி கண்காட்சி மையம் அமைக்கப்பட உள்ளது. சாஸ்திரிய கலைகள், கோயில் கட்டுமான பணிகள், ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள சனாதன முறை, ஐதீகம் உள்ளிட்டவையும் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட உள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?