குழந்தைகளா ! இங்க வாங்க எல்லாரும். பாலாஜி, நிவி, ஐஷ்வர்யா, விக்னேஷ், வசுதா, எல்லாரும் ஓடி வாங்கா ! நம்ம பாட்டி சொல்லப் போற மாயக்கம்பளக் கதைய ஜாலியா உட்கார்ந்து கேக்கலாம் வாங்க !
அக்னி நக்ஷத்திர நேரத்துல வெளில வெய்யில்ல அலைஞ்சு விளையாடம, அம்மா குடுக்கும் நீராஹாரத்தை இதமாக பருகி விட்டு வீட்டுக்குள்ளேயே அமர்ந்து பாட்டியின் அருமையான கதையை கேட்கலாமா என் அன்புச் செல்லங்களே ?
பாட்டி நீங்களும் நீராஹாரம் பருகிவிட்டு கதைய ஆரம்பிங்க பாட்டி ! நம்ம குழந்தைகள் எல்லாரும் ஆவலோடு நீங்க சொல்லப்போற மாயக்கம்பளக்கதைய கேக்க உக்காந்து இருக்காங்க பாட்டி.
பாட்டி : - குழந்தைகளே, என் அன்புச் செல்லங்களே,
கதைய ஆரம்பிக்கலாமா ? என்று கேட்க, சுட்டிக்குழந்தைகள் அனைவரும் மிக்க ஆர்வத்துடன், "ம், ம், ம், ஆரம்பிங்க பாட்டி என்று ஒருமித்த குரலில் ஆர்வமாக கேட்க முனைகிறார்கள்.
பாட்டி கதையை ஆரம்பிக்கிறாங்க :
ஒரு ஊருல ஒரு மாமா, மாமி, அவர்களோட இரண்டு குழந்தைகள் அஷ்வதி, மனோஜ் கூட வாழ்ந்து வந்தார்களாம்.
அந்த மாமா உடல் உழைப்பில் முன்னேறி பொருளீட்டி முன்னேறும் நல்ல மனம் படைத்தவர். எதற்கும் பேராசைப்பட்டு தவறான பாதையில் செல்லக்கூடாது என்று தெளிவான சிந்தனை உள்ளவர். அந்த மாமா நாள் தோறும் காட்டுக்குப்போய் விறகு வெட்டி பணம் சம்பாதித்து குடும்பத்தினரை காப்பாற்றி வந்தார். எவர் ஒருவர் கஷ்டத்தில் இருந்தாலும் தன்னால் இயன்றதைக்கொண்டு இல்லை என்று சொல்லாமல், பரோபகாரம் செய்வதையும் வழக்கமாகக்கொண்டவர்.
அப்படி ஒரு நாள் அவர் விறகு வெட்டச் சென்றபோது, அவர் விறகு வெட்டிக் கொண்டிருந்த அவரது வலது கையில் எங்கிருந்தோ ஒரு கம்பளம் பறந்து வந்து விழுந்தது. அந்த மாமா விறகு வெட்டியை கீழே போட்டுவிட்டு, அந்தக் கம்பளத்தை தம் இரு கையாலும் தாங்கிப் பிடித்து வானுக்கும் கீழுக்கும், சுற்றுப்புறத்தையும் பார்த்துவிட்டு, இது யாருடையதாக இருக்கும் எப்படி என் கையில் வந்து விழுந்தது என்று ஒன்றும் புரியாமல் ஆச்சர்யமாக பார்த்தார். ஒருவரும் கண்ணில் தென்படவில்லை !
அப்போது ஓரு அசரீரி வாக்கு, அந்த கம்பளத்திடமிருந்து வந்தது.
என்ன குழந்தைகளா, ஆச்சர்யமாக இருக்கா ?
ம், ம், ஆமாம் பாட்டி... என்று குழந்தைகனைவரும் ஒரு சேர குரல் கொடுக்க -
தொடர்ந்து கேளுங்கள் ! என்று பாட்டி தொடர்கிறாள் : -
அசரீரி குரல் அந்த மாயக் கம்பளத்திடமிருந்து தொடர்கிறது ;
"நான் தான் மாயக்கம்பளம்; என்னை உனது உழைப்பு, நற்சிந்தனை, பரோபகார குணம், இவை அனைத்தின் பயனாக இறைவன் உன்னிடம் அனுப்பியுள்ளார் ! உனக்கு என்ன வேண்டுமோ கேள் ! உனக்கு எதையும் செய்யக் காத்திருக்கிறேன்" - என்று சொல்கிறது. என் மீது ஏறி அமர்ந்தால், உன்னை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வேன் என்கிறது. அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட அந்த மாமா - உடனே என் வீட்டுக்குச் சென்று என் குடும்பத்தினருடன் உன் மீது அமர்ந்து இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும்" என்கிறார் அந்த மாமா. உடனே அந்த மாயக்கம்பளம் என்மீது ஏறிக்கொள் அப்படியே உன் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்று அந்த மாயக்கம்பளம் அவனது வீட்டுக்குச் சென்று, அவனது குடும்பத்தினருடன் இந்த உலகையே ஒரு சுற்று சுற்றிக் காண்பித்தது அந்த மாயக்கம்பளம். உடனே அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அந்த மாமாவின் குடும்பத்தினர் ஓவ்வொருவரும் தங்களுக்கு அழகான வீடுவேண்டும், வேலையாட்கள் வேண்டும், பணம், காசு, பொருட்கள் வேண்டும் என்று ஓவ்வொன்றாகக் கேட்க, கேட்க அந்த மாயக்கம்பளம் அது அனைத்தையும் நிறைவேற்றி வைத்தது.
எது எப்படி இருந்தாலும் என்னுடைய வேலையை நான் தொடர்ந்து செய்து என் குடும்பத்தையும் காத்து எல்லோருக்கும் என்னால் முடிந்த பரோபகாரத்தை செய்து வரும் பாக்கியத்தை எனக்குத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று அந்த மாமா மாயக்கம்பளத்திடம் தொடர் பிரார்த்தனை செய்து வந்தார்; எல்லோருக்கும் நல்லதையே நினைத்தார்; நல்லதையே தொடர்ந்து செய்து வந்தார்.
பிரிதொரு நாள் அந்த விறகு வெட்டி மாமாவின் குடும்பத்தினர் இந்த மாயக்கம்பளத்திடம் தங்களை கடலுக்குள் அழைத்துச்சென்று, கடல் வாழ் உயிரினங்கள், ஆச்சர்யங்களையும் தங்களுக்கு காட்டவேண்டும் என்று கேட்க, மாயக்கம்பளம் அவ்வாறே அவர்களை அதன்மேல் அமரச்செய்து அவர்களை உல்லாசமாக கடலடியில் வாழும் ஆச்சர்யங்களையும் சுற்றிக்காண்பித்து அவர்களை பத்திரமாக அவர்கள் வீட்டுக்குத் திருப்பிக்கொண்டு வந்தது.
என்ன குழந்தைகளே, "இதே போல் மாயக்கம்பளம் நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்று உங்களுக்கும் நினைக்கத் தோன்றுகிறது அல்லவா ? என்று பாட்டி கேட்க குழந்தைகளனைவரும் நீங்காத ஆச்சர்யத்துடன் " ஆமாம் பாட்டி, ஆமாம் பாட்டி " என்று ஆர்வமாக பதிலளித்தார்கள்.
இப்படி அவர்கள் தொடர்ந்து மாயக்கம்பளத்தின் அதிசயத்தை உணர்ந்து அனுபவித்து வந்தபோதும், விறகுவெட்டி மாமா மட்டும் தன் தொழிலை விடாமல் தொடர்ந்து அதன் மூலம் பணம் சம்பாதித்து. தன் பரோபகாரச்செயலை விடாமல் செய்துவந்தார், தன் குழந்தைகளுக்கும் நல்ல மார்க்கத்தினை வழிகாட்டி, உழைப்பின் மேன்மையையும், அதனால் சம்பாதிக்கும் பணாத்தால் பரோபகாரம் செய்து வாழவேண்டிய நற்சிந்தனையும் போதித்தார்.
அவரின் பரோபகாரப் பயனாக அவருக்குக்கிடைத்த இறையருளே இந்த மாயக்கம்பளம் என்றும் இதே போல் நீங்களும் நேர்மையான பாதையில் படித்து, உழைத்து, முன்னேறி, பிறர்க்குச் செய்யவேண்டிய பரோபகாரச்செயலையும் தொடர்ந்து செய்து வாழ்ந்தால், உங்களுக்கும் அரிய பல நிகழ்வுகள், பேறுகள், நற்பயன்கள் கிடைக்கும் என்றும் விறகுவெட்டி மாமா அவர் குழந்தைகளுக்கு அறிவுரைத்தார். அந்தக்குழந்தைகளும் அவரது அறிவுரையை ஏற்று வாழ்வில் முன்னேற்றம் கண்டு பரோபகாரச்செயலை சிரமேற்கொண்டு வாழ்ந்து அறிய பல கிடைத்தற்கரிய பேறுகளைப்பெற்று வாழ்ந்து வந்தனர்.
என்று பாட்டி சொல்லி -
"என்ன குழந்தைகளே , பரோபகார சிந்தனையுடன், ஒருவருக் கொருவர் உற்ற துணையாக இருந்து நீங்களும் நற்சிந்தனையுடன் வாழ்வில் நன்கு கல்வி அறிவு பெற்று, உழைப்பின் மேன்மையை அறிந்து, ஒருவருக்கு ஒருவர் உபகாரமாக இருந்து வாழ்வில் முன்னேறி இந்தப் பாட்டி சொன்ன "பரோபகாரம் இதம் சரீரம்" - அதாவது இந்த சரீரம்(உடல்) பெற்ற பாக்கியமே - நமது சரீரம் மூலமாக ஒருவருக்கொருவர் உபகாரமாக இருப்பதுவே" என்பதை நினைவில் கொண்டு உங்கள் வாழ்க்கையையும், உங்களைச் சார்ந்தவர், அண்டை, அயலார் வாழ்க்கையையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லுங்கள் கண்மணிகளே, செய்வீர்களா ? என்று கேட்டு, குழந்தைகளுக்கு கதை சொல்லி முடித்தாள் பாட்டி !
குழந்தைகளும் "நாங்கள் அப்படியே செய்றோம் பாட்டி என்று ஒருமித்த குரலில் பதிலளித்தனர்.

கதாசிரியர் - உமா வெங்கடேசன்