தமிழகத்தில் பதற்றத்தை உண்டாக்க இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள்: சதிகாரர்களை கைது செய்ய போலீசார் தீவிரம்

தமிழகத்தில் பதற்றத்தை உண்டாக்க இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள்: சதிகாரர்களை கைது செய்ய போலீசார் தீவிரம்


சென்னை, அக்.30-


தமிழகத்தில் பதற்றத்தை உண்டாக்க இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இவற்றை அனுப்பும் வெளிநாட்டு சதிகாரர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


சென்னையில் உள்ள தமிழக போலீஸ் தலைமையகமான டி.ஜி.பி. அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளன.


முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்-–நடிகைகள், முக்கிய அரசு அலுவலகங்கள், பள்ளி-–கல்லூரிகள், விமான நிலையங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை குறிவைத்து இந்த மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரேநாளில் 10-க்கும் மேற்பட்ட மிரட்டல் கடிதங்களும் வந்துள்ளன. இந்த கடிதங்கள் தமிழகத்தில் ஒரு விதமான பதற்றத்தை உருவாக்கும் உள்நோக்கத்தோடும், புரளியை கிளப்புவதற்காகவும் அனுப்பப் படுகின்றன. இருந்தாலும், போலீசார் அதனை சாதாரணமாக விட்டுவிடுவதில்லை.


சம்பந்தப்பட்ட இடங்களுக்கு 4 மோப்பநாய்களுடன் 4 தனிப்படை வெடிகுண்டு நிபுணர்களோடு போலீசார் சென்று சோதனை நடத்துகிறார்கள். இரவு, பகல் என்று எந்த நேரமாக இருந்தாலும் போலீசார் சளைக்காமல் சோதனை செய்கிறார்கள்.


இந்த ஆண்டு இதுவரை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு இ-–மெயில் மூலமாக 229 வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இந்த மிரட்டல் கடிதங்களில் கூறப்பட்டுள்ள தகவலில் உள்ள இடங்களில் ஒரு இடத்தைகூட சோதனை போடாமல் போலீசார் விட்டதில்லை. அது வெறும் புரளி கடிதங்கள் என்றாலும் கூட மிகவும் பொறுப்போடு போலீசார் நடந்து வருகிறார்கள். இந்த மிரட்டல் கடிதங்களை வெளிநாடுகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட செயலி வாயிலாக சதிகாரர்கள் அனுப்பி வருகிறார்கள் என்பதை ‘சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்துள்ளனர்.


அந்த சதிகாரர்களை ‘சைபர் கிரைம்' போலீசாரும் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். குறிப்பிட்ட செயலியை முடக்குவதற்கு கடிதங்கள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சர்வதேச போலீஸ் உதவியோடு மிரட்டல் கடிதங்களை அனுப்பும் சதிகாரர்களை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%