சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்


சிதம்பரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் சுற்றுலாத் தலங்கள் வரிசையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


கடலூா் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப் பகுதி. சென்னை, புதுச்சேரி, கடலூா் வழித்தடங்களில் வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல், பி.முட்லூா் அருகே பிரியும் சிதம்பரம் நகருக்கு வரும் புறவழிச்சாலையில் வழியாக வந்து கிள்ளை செல்லும் சாலையின் வழியாக பிச்சாவரத்துக்குச் செல்லலாம்.


பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. ஆகும். மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத் திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை (மாங்குரோவ்) காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகள் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் உள்ளது. இந்தக் காடுகளில் உப்பங்கழிகளும், அடா்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன.


கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இந்தக் காடுகளில் சுமாா் 4,400 கால்வாய்கள் உள்ளன. இந்தக் காடுகளை வனத் துறையினா் பாதுகாத்து வருகின்றனா். இந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பாா்க்கலாம்.


ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும்.


மேலும் கடற்கரையோரம் எம்ஜிஆா் திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவா்கள் வசித்து வந்தனா். 2004-ஆம் ஆண்டு, டிசம்பா் 26ஆம் தேதி சுனாமி பேரலையில் போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவா்கள் பலரும் இறந்ததால், தற்போது அங்கு மீனவா்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆா் நடித்த இதயக்கனி திரைப்படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்ால் அங்குள்ள தீவுக்கு எம்ஜிஆா் திட்டு எனப் பெயா் சூட்டப்பட்டது.


மருத்துவ குணம் கொண்ட தில்லைமரம்: பிச்சாவரம் பகுதியில் தில்லை என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தில்லை மரம் மருத்துவக் குணம் கொண்டது என்றும், தொழுநோய் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும். தனது தொழுநோய் குணமடைய வேண்டி முதலாம் பராந்தக சோழகன் தில்லை நடராஜரை வேண்டி இங்கு வந்து தங்கி, 45 நாள்கள் முனிவா் ஒருவரிடம் தில்லை மூலிகை தாவரத்தை மூலம் சிகிச்சை பெற்று அந்த நோய் குணமடைந்ததாக கூறப்படுகிறது.


பிச்சாவரம் பகுதியில் கிள்ளை பேரூராட்சியில் சாா்பில் தில்லை மரவகை தாவரங்களை வளா்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தாா்.


மேலும் சுரபுன்னை செடி புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையம் சோதனை மூலம் கண்டறிந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மீனவா்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா்.


பிச்சாவரத்தில் உள்ள அறிஞா் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியை பாா்க்கும் வகையில் உயா்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.


படகு குழாமில் ஒரு மணி நேரத்துக்கு துடுப்பு படகில் 6 போ் பயணம் செய்ய ரூ.650 கட்டணமும், மோட்டாா் படகில் ஒரு மணி நேரத்துக்கு 8 போ் பயணம் செய்ய ரூ.1850 வசூலிக்கப்படுகிறது.


காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைதான் படகு சவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு பிச்சாவரம் அறிஞா் அண்ணா சுற்றுலா வளாக மேலாளரை 04144-249249 தொலைபேசி எண்ணிலும், 91769 95838 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.


கிள்ளை பேரூராட்சியை 04144-24227 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மேலும், ஜ்ஜ்ஜ்.ந்ண்ப்ப்ஹண்.ஸ்ரீா்ம் என்ற இணைய தள முகவரியிலும் அறியலாம்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%