சீனா மீதான வரி 10% குறைப்பு: அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
புசான், அக். 30–
சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு, அந்நாட்டுப் பொருட்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இது உலக நாடுகளின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் டிரம்ப், வர்த்தக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகளுக்கான பயணமாகும். தற்போது தென்கொரியாவில் அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நாளை (31ந் தேதி) நடைபெற உள்ள ஆசியா–பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தென்கொரியாவின் புசான் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நடந்துள்ளன. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங், டிரம்பிடம் வலியுறுத்தி உள்ளார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் சீன அதிபருடனான சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சீனா மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீன அதிபருக்கு புகழாரம்
சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. பல விஷயங்களில் இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சக்திவாய்ந்த தலைவர் ஜின்பிங் என்று டிரம்ப் தெரிவித்தார்.
சீனாவுடன் மேலும் பேச்சுவார்தைகளுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் டிரம்ப் சீனா செல்கிறார். சீன அதிபரும் அமெரிக்காவிற்கு செல்கிறார். புளோரிடா, பாம் பீச், வாஷிங்டனில் இந்த சந்திப்பு நடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜின்பிங் கூறுகையில், "சீனா மீதான வரி, 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்கத் தொடங்கும். மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த அரிய வகை மண் ஏற்றுமதி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது.
இனி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மண் ஏற்றுமதியில் எந்தத் தடைகளும் இருக்காது என்று தெரிவித்தார்.
முன்னதாக இரு நாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
'உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி' என்று ஜின்பிங் கூற ஆகிவே, பதிலுக்கு டிரம்ப், 'ஜின்பிங் பேரம் பேசுபவர். இது வெற்றிகரமான சந்திப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும். அமெரிக்காவும் சீனாவும் அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். உலக பொருளாதாரத்தை மேம்படுத்த சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் சில விஷயங்களை சாதிக்க முடியும் என்று ஜின்பிங் கூறினார்.