குழந்தை பிறந்து இறந்ததாக கூறிய தனியார் மருத்துவமனை மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் குழந்தை நலம்

குழந்தை பிறந்து இறந்ததாக கூறிய தனியார் மருத்துவமனை  மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் குழந்தை நலம்


உயிருடன் உள்ள குழந்தையை இறந்ததாக தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறிய நிலையில், குழந்தையின் கைகளில் அசைவு இருந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தை நலமாக உள்ளது.


மதுரையில் உயிருடன் இருந்த பச்சிளம் குழந்தையை இறந்ததாகத் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறிய நிலையில், குழந்தையின் உடலில் அசைவு இருந்ததைக் கண்டு உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின் குழந்தை நலமடைந்ததையடுத்து, அலட்சியமாகச் செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதிச்சியம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–


எனது மகளுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அனுமதித்தோம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பிறந்தாலும் பிழைப்பதற்கு 10 சதவீதமே வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, காலை 5:45 மணிக்கு எனது மகளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், காலை 7 மணி அளவில் பணியில் இருந்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.


இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த நாங்கள், குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். இதற்கிடையே, காலை 8:45 மணி அளவில் உறவினர்கள் குழந்தையைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டதால் எடுத்துச் சென்றோம். அப்போது ஒரு கூடையில், கருப்பு நிற பிளாஸ்டிக் கவரில் குழந்தை வைக்கப்பட்டிருந்தது. உற்று நோக்கியபோது குழந்தையின் கைகளில் அசைவு தெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இதுகுறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்தனர்.


உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தை தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.


சுமார் 7 மணி நேரமாக உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாகக் கூறி, எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%