திருவண்ணாமலையில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளி: முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்
திருவண்ணாமலையில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
திருவண்ணாமலை சமுத்திரம் பைபாஸ் சாலையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிதாக அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவிகள் விடுதி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. மாதிரி பள்ளியில் 22 வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள், நூலகம், கணினி அறை, அலுவலகம், கூட்டரங்கம் மற்றும் கழிவறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தனித்தனியாக அமைக்கப்பட்டு உள்ள மாணவ, மாணவிகளின் விடுதிகளில் வரவேற்பு அறை, விடுதி காப்பாளர் அறை, மாணவர்கள் தங்கும் அறைகள், பொதுஅறை, நூலகம், மின்அறை, மின் தூக்கி– 2, சமையலறை, சலவை அறை, சமையல் கூடம், குளியலறை மற்றும் கழிவறைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்தார்.
விழா நிறைவடைந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மாதிரி பள்ளியை நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுடன் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செவ்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?