குழந்தைகளின் தீர்ப்பு

குழந்தைகளின் தீர்ப்பு



அந்தக் குடியிருப்பில் மொத்தம் மூன்று குடித்தனங்கள்.


மேல் தளத்தில் வீட்டு உரிமையாளர்.

கீழ் தளத்தில் ஒரே வரிசையில் இரண்டு வாடகைக் குடித்தனங்கள்.


காலையில் வேலைக்கு ஓடும் அவசரம், மாலையில் களைப்பின் சலிப்பு. சிறு சிறு சங்கடங்கள்.

இவை எல்லாம் சேர்ந்து அந்த இரண்டு வீட்டாருக்கும் அடிக்கடி உரசலை உருவாக்கும்.


இன்று அந்த உரசல் ஒரு படி மேலே போய் பெரும் தீப்பொறியானது.


“உங்க வீட்டுக் குழாய்லிருந்து தான் தண்ணீர் ஒழுகுது!”


“இல்லை இல்லை... உங்க குழந்தைதான் உடைச்சிருக்கும்!”


குரல்கள் உயர்ந்தன. வார்த்தைகள் கத்தியாய் மாறின. முகங்கள் சிவந்தன. கை முஷ்டிகள் தயாராயின.


அடிக்கடி வந்து போகும் சண்டைதான்

இந்த முறை அடிதடியாக மாறத் துடித்தது. 


மேல்தளத்தில் இருந்த வீட்டு உரிமையாளர் கத்தல்களின் உசுப்பலால் படிகளில் இறங்கினார்.


மிக நெருக்கமாய் நின்று கத்திக் கொண்டிருந்த இருவரையும் கைகளால் மெதுவாகத் தள்ளி 

ஒதுக்கி நிறுத்தினார்.


“ஒரு நிமிஷம் என் கூட வாங்க…”

என்று சொல்லி அவர்களை வீட்டின் முன்புறம் அழைத்துச் சென்றார்.


அங்கே,


இரண்டு வீடுகளைச் சேர்ந்த

நான்கு குழந்தைகள்.


மண் தரையில் சிறிய சிறிய கைச்சுவடுகளால் ஒரு மண் வீடு கட்டிக் கொண்டு, உடைந்த கிண்ணங்கள், பிளாஸ்டிக் மூடிகள் போன்றவற்றை சமையல் பாத்திரங்களாய் பயன்படுத்தி குட்டியாய் ஒரு கூட்டுக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன.


ஒரு குழந்தை “சாம்பார்” கலக்கிக் கொண்டிருந்தது. மற்றொரு குழந்தை “அம்மா சாப்பிட வாங்க” என்று கூப்பிட்டது.


யாருடைய வீடு, யாருடைய பொருள்

என்ற கணக்கே இல்லை. சிரிப்பும், நேசமும் மட்டுமே பொதுவாக இருந்தது.


வீட்டு உரிமையாளர் மெதுவாக சொன்னார்:


“அவங்களைப் பார்த்தாவது

ஒற்றுமைன்னா என்ன?ன்னு கத்துக்கங்க…”


அந்த வார்த்தைகள் கூர்மையாக

மனதிற்குள் நேராகப் பாய்ந்தன.


இருவரும் பேசவில்லை.

குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அடுத்த நாள் முதல்,


குழாய் ஒழுகினால் ஒரு வீட்டார் மற்ற வீட்டாரைக் குற்றம் சாட்டாமல் தாங்களே சரி செய்து கொண்டார்கள்.  


குழந்தைகள் விளையாடும் போது

யாரும் கத்தவில்லை. தாங்களும் விளையாட்டில் கலந்து கொண்டனர்.


சில நேரங்களில் உலகத்தின் பெரிய பாடங்களை பெரியவர்கள் சொல்லுவதில்லை. குழந்தைகள்

மௌனமாய்க் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.


(முற்றும்)


முகில் தினகரன்

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%