பாரதி மக்கள் நல மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும், பொங்கல் விழா நாளில் மிகவும் முக்கிய பிரமுகரை அழைத்து அவரை கெளரவித்து பாராட்டி விழா எடுப்பது வழக்கமாக இருந்தது.
அதேபோல இந்த ஆண்டும் ஆன்மீக செம்மல், கொடை வள்ளல், தொழிலதிபர் பரந்தாமன் அவர்களை பாராட்டுவதென பாரதி மக்கள் நல மன்றத்தின் செயற்குழு முடிவு செய்திருந்தது.
அதன்படி விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.விழா நடக்கும் மேடையே சினிமா செட் போன்று வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. விழா நாயகன் அமருவதற்கென பிரத்யேகமான நாற்காலியும் மேடையில் போடப்பட்டிருந்தது .
விழா நடக்கும் அந்த மண்டபத்தின் வாசல் வரை சிகப்பு கம்பளமும்
விரிக்கப்பட்டு மலர்களும் தூவப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி நடக்கும் மண்டப வாயிலில் இருந்து ,தெரு முனை வரை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழா முடிந்ததும் இரவு விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தால் மக்கள் கூட்டம் அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது.
பளபளக்கும் ஆடையில் விழா நாயகன் தொழிலதிபர் பரந்தாமன்
மேடையில் அமர்ந்திருக்க, அவரை பாராட்டி புகழ்வதற்கென அரசியல்
வாதிகள், ஆன்மீகவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் என விழா மேடையே கம்பீரமாக தோற்றமளித்தது.
அரசியல் கட்சியினர் கேட்ட போதெல்லாம் வாரி வழங்கும் வள்ளலே! வற்றாத ஜீவநதியே! நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பெரும் வள்ளலாக வாழவேண்டும்; என்று வாழ்த்தி அமர்ந்தார் ஆளும் கட்சி பிரமுகர் ஆளவந்தார்.
நமது மாவட்டத்தில் மட்டுமல்ல! மாநிலம் முழுவதுமுள்ள பலநூறு திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்திட, நிறைவாக பொருளுதவி செய்து வரும் அய்யா பரந்தாமன் ஆண்டு பல வாழ்ந்து பல்லாயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் செய்ய வாழ்த்து கிறேன் என்றார் ஆலயங்கள் திருப்பணி இயக்க தலைவர் ஆறுமுக தாசன்.
ஊற்றாக உருவெடுத்து,உள்ளன்பாய் நிதி கொடுத்து, மும்மதத்தினர்
மனதுக்குள்ளும் முழு நிலவாய் வாழ்ந்து வரும் வள்ளல் பெருமானே!
உங்கள் புகழை உலகெங்கும் பாடுவோம்! என்றார் இலக்கியச் சுடர் எழுத்தாளர் கெளரி மைந்தன்.
இவ்வாறு தொழிலதிபர் பரந்தாமனை போற்றி புகழ்ந்த, பாராட்டு விழாவில் பாரதி மக்கள் நல மன்றத்தின் சார்பில் வெள்ளிக் கிரீடம் சூட்டி,
தங்கஜரிகையில் பொன்னாடையும் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டது.
விழா முடிந்த இரண்டு தினங்களுக்கு பிறகு, தொழிலதிபர் பரந்தாமன் பெயருக்கு அவரது வீட்டு முகவரிக்கு, கடிதம் ஒன்று அஞ்சல் மூலமாக வந்தது.
கடித உறையை ஆவலுடன் பிரித்து அதிலுள்ள, கடிதத்தை வெளியே எடுத்து படிக்கத் துவங்கினார்.
தொழிலதிபர் அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கம்! தங்களுக்கு பாராட்டு விழா நடத்திய விழா மண்டபத்திற்குள் நானும் வந்து கலந்து கொண்டேன். எனது பெயர் அன்பு வாணன். எனது தந்தை ஒரு கூலித் தொழிலாளி . நன்றாக நான் படிக்கக் கூடியவன் என்பதால் என்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். நான் முதலாமாண்டு பிகாம் படிக்கிறேன்.எனக்கிருக்கும் படிக்கும் ஆர்வத்தை கண்டு, என்னை எனது தந்தை மிகுந்த சிரமப்பட்டு படிக்க வைக்கிறார். அன்றாடம் கூலி வேலைக்கு சென்றால்தான் எங்கள் வீட்டில் நாங்கள் சாப்பிட முடியும்.
இப்படித்தான் ஏழை எளிய குடும்பத்தில் உள்ள நன்றாக படிக்கும் மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகுந்த சிரமத்தோடு கல்வி பயின்று வருகிறோம்.
கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யவும், அன்னதானம் செய்யவும் வசதி படைத்தவர்கள் நிரம்ப இருக்கிறார்கள். ஆனால் எங்களைப் போன்று நன்றாக படிக்கக் கூடிய ஏழை எளியவர்கள் பொருளாதார பாதிப்பில் தொடர்ந்து மேலே கல்வி பயில முடியாத சூழலில் இருந்து வருகிறோம். கல்லூரிக்கு தொடர்ந்து கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழலில் படிப்பை பாதியில் விட்டவர்களும் உண்டு.
ஆதலால் தங்களிடம் எனது பணிவான ஒரு கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன். அதை நீங்கள் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
இதுநாள் வரை ஆன்மீகபணிகளுக்கும் மற்றும் பொதுக் காரியங் களுக்கும் தாங்கள் கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஆதலால் தாங்கள் மனது வைத்து எங்களைப் போன்று பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள ஏழை எளிய கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி பயில்வதற்கு பொருளுதவி செய்தால் நாங்கள் என்றென்றும் தங்களை தெய்வமாக வாழ்நாள் முழுவதும் போற்றிக் கொண்டாடுவோம். எங்கள் குடும்பத்தினரும் தாங்கள் செய்யும் பொருளாதார உதவியால் தங்களை கல்வி வள்ளலாக வணங்கி வாழ்த்திடுவோம்!
கடிதத்தை படித்த நிமிடம் முதல், பரந்தாமன் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்.
சில நாட்கள் கடந்த நிலையில், தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து செய்தித் தாள்களிலும் இப்படி ஒரு தலைப்பு செய்தி வெளியாகி இருந்தது.
தொழிலதிபர் பரந்தாமன் தனது பெயரில் "கல்வி அறக்கட்டளை" ஒன்றை துவக்கியிருப்பதாகவும், அறக்கட்டளையின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதற்காக எங்கள் அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ளலாம்; என்ற செய்தியை, நூலகத்தில் படித்த அன்பு வாணன் தொழிலதிபர் பரந்தாமனுக்கு நேரில் நன்றி தெரிவிக்க அவரது
வீட்டை நோக்கி புறப்பட்டான்.
-------------------------------
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.