மகள் மல்லிகைக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வருவது குறித்து புனிதா மிகவும் கவலையாக இருந்தாள்.
டவுனுக்கு சென்று டாக்டரிடம் காண்பித்துவிட்டு வரலாம் என்றால் கையில் காசு இல்லை,
கணவர் மாணிக்கமும் தனது முதலாளி வேலையாக வெளியூர் சென்றுள்ளான்.
எனவே, குழந்தைக்கு அவ்வப்போது கஷாயம் தயாரித்து கொடுத்து வந்தாள்.
அப்போது, “புனிதா “என்று குரல் கொடுத்தவாறு மாணிக்கம் வீட்டினுள் நுழைந்தான்.
கணவருக்கு காப்பி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள் புனிதா.
காப்பியைபருகியவாறு “எங்க மல்லிகையை காணோம்? விளையாடிக்கிட்டு இருக்காளா,”என கேட்டான்.
அவளுக்கு இரண்டு நாளா தொடர்ந்து காய்ச்சல் அடிச்சுகிட்டு இருக்கு, நான் தொடர்ந்து கசாயம் கொடுத்துக்கிட்டு இருக்கேன், இருந்தாலும் காய்ச்சல் விடல,நீங்க எப்போ வருவீங்கன்னு காத்துகிட்டு இருந்தேன்,
“ நீங்க மகளை உடனே டவுன் டாக்டர் கிட்ட அழைச்சுட்டு போயிட்டு வாங்க என்றாள்.
அதை கேட்டு எரிச்சலுடன் திரும்பிய மாணிக்கம்,
“ இதப்பாரு புள்ள, என்னால இப்போ டவுனுக்கெல்லாம் போயிட்டிருக்க முடியாது, ரெண்டு நாளா முதலாளி கொடுத்த வேலைகளை முடிக்கவே மிகவும் அலைச்சலாக போயிடுச்சி , எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கு, சட்டைபையில பணம் வச்சிருக்கேன்,
எடுத்துக்க, நீயே புள்ளய டவுன் மருத்துவரிடம் கூட்டிச்சென்று காண்பித்து வா” என்று கூறிவிட்டு ஓய்வு எடுக்க படுக்கைக்கு சென்றுவிட்டான்.
கணவர் சொன்னதை கேட்டவுடன் அவளுக்கு, அவனின் நிலை புரிந்தது.
அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல், வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மகளை மருத்துவரிடம் அழைத்து செல்லலாம் என முடிவு செய்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் தன் வேலையெல்லாம் முடித்துக்கொண்டு, கணவனிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என நினைத்து அறையினுள் சென்று பார்த்தபோது, அவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
புனிதா, கணவனை பரிதாபமாக பார்த்துவிட்டு, அவனை எழுப்ப விரும்பாமல் தனது மகளை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் காண்பிக்க பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றாள் அவள்.
யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, உறக்கம் கலைந்து எழுந்துவந்த மாணிக்கம் கதவை திறந்தால், அவனுடன் வேலைபார்க்கும் மாரிமுத்து நின்று கொண்டிருந்தான்.
"அண்ணே, முதலாளி உங்களை கையோட கூட்டியார சொன்னார் என்றான் மாரி.
“என்னவிஷயம்?
”என கேட்டான் மாணிக்கம்.
“அதெல்லாம் தெரியாதுன்னே, மாணிக்கம் ஊர்ல இருந்து வந்திருப்பான், நீ போயி நான் கூப்பிட்டேன்னு சொல்லி கையோட கூட்டிகிட்டு வா “-ன்னு சொன்னாரு, என்றான் மாரிமுத்து.
“சரி, இரு, இதோ வரேன்” என்ற மாணிக்கம், வீட்டினுள் சென்று சட்டையை அணிந்து கொண்டு முதலாளியை பார்க்க பங்களாவிற்கு விரைந்தான்.
இவனை பார்த்தவுடன் முதலாளி கோபமாக, “ஊரிலிருந்து வந்தவுடன் நேராக வீட்டிற்கு சென்றுவிட்டாயா?”போன காரியம் என்ன ஆச்சுன்னு
இங்கு வந்து தகவல் கூட சொல்ல முடியலையா? உனக்கு, , நேர வீட்டுக்கு போயி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கியா? என கடிந்து கொண்டார்.
மாணிக்கம், பதில் ஏதும் பேசாமல் அமைதியாக நின்றான்.
சரி,சரி, “ரோஸிக்கு காய்ச்சலா இருக்குன்னு பாப்பா சொல்லிச்சு, நீ என்ன பண்ற, நம்ம ரோஸிய உடனடியாக டவுன் டாக்டர் கிட்ட எடுத்துக்கிட்டு போயி ஊசி போட்டுக்கிட்டு வா, நான் டாக்டர்கிட்ட போன்ல பேசிடுறேன்” என்றார் அவர்.
முதலாளி சொல்வதை கேட்ட மாணிக்கம் அதிர்ச்சி அடைந்தான், காரணம், அவர் “ரோஸி” என்று சொன்னது அவரது மகளின் வளர்ப்பு நாய் ஆகும்.
இருந்தாலும் முதலாளியிடம் மறுத்து பேசமுடியாது,
எனவே, அவரின் கட்டளையை உடனடியாக நிறைவேற்ற காரில் “ரோஸி “என்ற அந்த நாய்க்குட்டியை மடியில் வைத்துக் கொண்டு டவுனுக்கு புறப்பட்டான் மாணிக்கம்.
கார், பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்லும்போது, தனது மனைவி, மகளை தோளில் சாய்த்தவாறு டவுனுக்கு செல்லும் பேருந்திற்காக நிற்பதை பார்த்தவுடன் கண்களில் கண்ணீருடன் தலையை திருப்பிக்
கொண்டான்.
தனது அருமை மகளை
டாக்டரிடம் அழைத்து செல்ல, தான் மறுப்பு சொன்னதற்கு தனக்கு அளிக்கப்பட்டதண்டனை
இது எனமனதிற்குள் நொந்து கொண்டான் அவன்.
**********
கோபாலன் நாகநாதன்,
சென்னை -33.