
நாகர்கோவில், ஆக.2
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம்பணி ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ, காவல் நிலையத்தில் இருந்து 17 கிமீ ஓடியவாறே வீட்டிற்கு சென்று போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே பூவியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(60). 41 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வந்தார். குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, மற்றும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய அவர் கடைசியாக நாகர்கோவில் கோட்டாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணனுக்கு கோட்டாறு காவல் நிலையத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. மேலும் அவரை குடும்பத்தினருடன் வரவழைத்து எஸ்பி ஸ்டாலின் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
வழக்கமாக காவல்துறையினர் பணி நிறைவு நாளில் துறை வாகனத்திலே வீட்டிற்கு அழைத்து சென்று வாழ்த்தி விட்டு வருவது வழக்கம். ஆனால் பாலகிருஷ்ணன் அதை ஏற்கவில்லை; பிரிவு உபசார விழா முடிந்ததும் பாலகிருஷ்ணன் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோட்டாறு காவல் நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் புவியூரில் உள்ள தனது வீட்டுக்கு ஓடியும், நடந்தவாறும் சென்றார்.
``இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது. உடற்பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தையும், பெற்றோரையும் பாதுகாக்க வேண்டும். எஸ்பி ஸ்டாலின் இளைஞர்களிடையே போதைக்கு எதிராக ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு என்னை கவர்ந்துள்ளது. நானும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஓய்வு காலத்திலும் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்`` என்றார்.
பாலகிருஷ்ணன் ஓய்வு நாளில் ஓடிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?