ஒரே நாளில் 70 கோடி பரிவர்த்தனை: புதிய மைல்கல்லை எட்டிய யுபிஐ
Aug 07 2025
21

மும்பை:
இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த 2-ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது தற்போது யுபிஐ பண பரிவர்த்தனையில் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அப்போது 35 கோடியாக இருந்த தினசரி பண பரிவர்த்தனையின் எண்ணிக்கை கடந்த 2024 ஆகஸ்ட்டில் 50 கோடியாக அதிகரித்தது. இப்போது அது 70 கோடியாக உயர்ந்துள்ளது. இதை என்பிசிஐ வெளியிட்டுள்ள தரவுகள் உறுதி செய்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் யுபிஐ-யில் தினசரி பண பரிவர்த்தனையின் எண்ணிக்கை 65 கோடியாக இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் பிறந்ததும் பல்வேறு பயன்பாட்டு கட்டணங்கள், வாடகை, ஊதியம் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொண்ட காரணத்தால் 70 கோடி பண பரிவர்த்தனையை கடந்த 2-ம் தேதி அன்று எட்டியுள்ளது.
இந்தியாவில் யுபிஐ: இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பண பரிவர்த்தனைகயின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?