எனக்கான என் தீர்ப்பு

எனக்கான என் தீர்ப்பு



பத்து வருடங்கள். ஒரு பெண்ணின் இளமைக்கும், பொறுமைக்கும், மௌனத்திற்கும் விலை கட்ட முடியாத காலம்.


ஊர் ராசாத்தியை ஏசியது. "ஓடிப் போனவனுக்காக உயிரை அடகு வைக்கிறாயே நீயென்ன முட்டாளா?” என்றது.


அவள் மட்டும் 'அவர் திரும்பி வருவார்" என்று தனக்குள் சொல்லிக் கொள்வாள்.


வாசலில் அமர்ந்து காத்திருப்பது பழக்கமாகிவிட்டது. வாசல்திண்ணை, மாலை விளக்கு, வெறுமையான நாற்காலி அனைத்திற்கும் அவளைப் போலவே வயதாகிக் கொண்டே போனது.


ஒரு நாள்…

அவள் கணவன் சோமு வந்தான்.


கறுப்பு வெள்ளை தாடி முகம்.

கண்களில் குற்ற உணர்ச்சி. தேகத்தில் அதீத சோர்வு.


ராசாத்தி அவனிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. "சாப்பிட்டீங்களா?” என்ற ஒரே வார்த்தை கேட்டாள். 


சோமு இல்லையென்று தலையாட்ட, உடனே பரிமாறினாள்.


அவன் சாப்பிட்டான்.


அவளின் பத்து வருடக் காத்திருப்பையும்,

அந்த ஒரு தட்டில் போட்டு விழுங்கினான்.


பின் மெல்லமாய்ப் பேசத் தொடங்கினான்.


“இத்தனை வருஷம் தனியாவா இருந்தே?”


மேலும், கீழும் தலையை ஆட்டினாள் ராசாத்தி.


“என்ன நம்பிக் காத்திருந்தியா?”


" வேற யாரையாச்சும் துணைக்கு சேர்த்துக்கிட்டியா?"


ஒவ்வொரு கேள்வியும்

நாசூக்காய்க் கொட்டின. 


சோமு சோதித்தது அவள் பொறுமையையோ, நம்பிக்கையையோ அல்ல,

அவளின் தூய்மையை.


ராசாத்தி புரிந்துகொண்டாள்.


ஓடிப் போனவன் தனியாகத் திரும்பி வரவில்லை. சந்தேக மூட்டையோடு திரும்பி வந்திருக்கான் என்பதை ராசாத்தி தெளிவாகப் புரிந்து கொண்டாள்.


அவள் இரவு அவள் பையை எடுத்தாள்.

ஓடிப் போகத் துணிந்தாள்.


வாசலில் நின்று ஒரு முறை கூடத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.


இதுநாள் வரை அவள் காத்திருந்தது அவளின் தியாக வெளிப்பாடு. இன்று அவள் ஓடிப் போவது அவளுக்கான நேர்மைத் தீர்ப்பு. 




முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%