😟😟
பாக்கியத்தம்மாளுக்கு அடிவயிற்றில் புற்றுநோய் வந்திருப்பதாக அவளை பரிசோதித்த மருத்துவர்கள் சொன்னார்கள். மேலும் வயது தொண்ணூறை நெருங்குவதால் வேதிச்சிகிச்சையோ, அறுவைசிகிச்சையோ செய்வது இயலாதென்றும் அறிவித்து விட்டனர். திரும்பத்திரும்ப அவள் மயங்கி விழுவதும்,ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு ச் சென்று இரண்டு மூன்று யூனிட் ரத்தம் ஏற்றி வருவதும் கடந்த நாலைந்து மாதமாக நடந்து வருவது அந்தக் குடும்பத்துக்கு பழகிவிட்டது.தனக்கு என்ன விதமான வியாதி என்று அவளால் அனுமானிக்க இயலவில்லை எனினும்; தன்னால் முன்போல் நடமாட முடியாது; என்பதைப் புரிந்து கொண்டிருந்தாள்.
லண்டனிலிருந்து அம்மாவைப் பார்க்க விடுமுறையில் வந்திருந்த மூத்தபையன் ராஜீவனும் மனைவி
சுரேகாவும் மறுநாள் திரும்பிப் போக ஆயத்தமாய் இருந்தார்கள். பாக்கியத்தம்மாளிடம் அருமையாக பேசி, அவளது வங்கிக் கணக்கில் நிறைய பணம் போட்டிருப்பதாகவும், இன்னும் தேவைப்பட்டால் வீடியோவில் பேசும் போது சொன்னால் பணம் ட்ரான்ஸஃபர் செய்வதாகவும், உடம்பை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விடை பெற்றார்கள்.
தலையை மட்டுமே பாக்கியத்தம்மாளால் அசைக்க முடிந்தது.
மணலியிலிருந்து இரண்டாவது மகன்
ராமேசனும் மிதிலாவும் வந்தனர் அவர்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததினால் அடுத்தவாரம் கலிஃபோர்னியா பயணப்படும் ஏற்பாடுகளில் இருந்தனர். அதிகாலை ஃப்ளைட் இருப்பதால் ஒரு வாரம் முன்னதாகவே பயணம் சொல்லிக் கொள்ள வந்திருப்பதால் சொல்லி நமஸ்கரித்தவர்களுக்கு நெற்றியில் திருநீறு இட்டவள்; 'நல்லபடியாக போய் வாங்க! அடிக்கடி ஃபோன் போடுங்க. நல்ல விதியிருந்தால் மீண்டும் பார்ப்போம்.'
என்பதோடு நிறுத்திக் கொண்டாள். ஏதோ சொல்ல வந்த மிதிலா ஏதோ சமிக்ஞை செய்ய, ராமேசன், 'அம்மா ! இப்போதைக்கு பத்து லட்ச ரூபாய் உன் பெயரில் வங்கியில் போட்டுள்ளேன். அங்கு போய் எங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டபின்.; ஓரிரு மாதங்களில் உன் கணக்குக்கு பணம் வந்து சேரும். நல்லவளாகப் பார்த்து ஒரு உதவியாளரை சமையல் வேலைக்கும் மேல் வேலைக்கும் கூடவே இருக்கிறது போல் வைச்சுக்கோங்க' உடம்பைப் பார்த்துகோங்க .எதற்கும் கஷ்டப்படாமல் இருங்க. வருட இறுதியில் நாங்கள் வந்து உங்களைப் பார்க்கிறோம்' என்று சொல்லி கிளம்பினார்கள். ' 'சரிப்பா' என்று முடித்துக் கொண்டாள்; பாக்கியத்தம்மாள்.
மூன்றாவது மருமகள் கோகிலா நிறைமாத கர்ப்பிணி ஆனதால்; மகன் கணேசனும் கையைப் பிசைந்தபடி நின்றான். கோகிலா என்ன செய்வது; என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி நின்றாள்.' ஆட்டோ ஓட்டுனராக இருப்பவன் தினம் வண்டி ஓட்டப் போய்த்தான் ஆகவேண்டும்.
விஷயம் கேள்விப்பட்டு ஓடோடி வந்தாள் சௌமியா.
காதல் திருமணம் புரிந்திருந்ததால் வீட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தவள்; எல்லோருக்கும் மூத்த சகோதரி
'நான் பார்த்துக் கொள்கிறேன்,அம்மாவை,' என்று சொன்னபோது
அனைவரும் ஒருமித்துக் கூறியது ' நன்றி' என்ற ஒற்றைச் சொல் மட்டுமே.
இப்படியாகத்தான் சௌமியா மீண்டும் பாக்கியத்தம்மாளின் மகளாக அந்த வீட்டினுள் நுழைய முடிந்தது. இப்போதும் பாக்கியத்தம்மாள் ஒரு தலைப்புடன் அவளை 'வா' என்றாலும் கண்கள் குளமானதை கவனித்த கோகிலா தன் அத்தையை ஆதரவாக அணைத்தபடி தன் நாத்தனாரை மனமார்ந்த நன்றியுடன் பார்த்தாள்.

சசிகலா விஸ்வநாதன்