இந்தி உட்பட பல மொழிகளைக் கற்று அறிஞராக திகழ்ந்தவர் பி.வி. நரசிம்மராவ்: சந்திரபாபு நாயுடு
புதுடெல்லி:
"இந்தி ஏன் கற்க வேண்டும் என்று இப்போது பேசுகிறோம். ஆனால், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இந்தி மட்டுமல்ல, 17 மொழிகளைக் கற்று புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்தார்" என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் பி.வி. நரசிம்ம ராவின் வாழ்க்கை மற்றும் மரபு எனும் தலைப்பில் சந்திரபாபு நாயுடு நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர், "பி.வி. நரசிம்ம ராவ் ஒரு அறிஞர். 17 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். இப்போது நாம் இந்தி ஏன் கற்க வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால், நரசிம்ம ராவ் இந்தி மட்டுமல்ல, பிற மொழிகளையும் கற்றுக்கொண்டதால், அவர் ஒரு சிறந்த மனிதராக மாறினார்.
1991-க்கு முன் நாட்டின் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது. லைசன்ஸ் ராஜ் ஆட்சியின் கீழ் நாடு கட்டுண்டு கிடந்தது. நாட்டின் வளர்ச்சி 3-4 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. 1991 காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. அந்நிய செலாவனி கையிருப்பு ஆபத்தான அளவுக்குக் குறைந்தது. இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக அங்கீகரித்தவர் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ். அவர் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தத்தின் பலன்களை இன்று நாம் அனைவரும் அனுபவித்து வருகிறோம்.
பெரும்பான்மை பலம் இல்லாத ஒரு அரசை நடத்தியவர் பி.வி. நரசிம்ம ராவ். இருந்தும், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், பெரு முதலாளிகள் மத்தியில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியதன் மூலம், சாத்தியமற்றதை சாதித்துக் காட்டினார். லைசன்ஸ் ராஜ்ஜியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், இந்தியாவின் ஐடி புரட்சிக்கு களம் அமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தவர் அவர். நாடு அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது.
இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு 2014. தைரியமான, தீர்க்கமான தனது தலைமையின் கீழ் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2028-ம் ஆண்டுக்குள் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான தெளிவான பாதையை நாடு கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி நமது நாட்டின் தேசிய பெருமை. சர்வதேச அளவில் மரியாதை கொண்டவராகவும், வெளிநாடுகளுடனான உறவை வலுப்படுத்துபவராகவும் அவர் உள்ளார். நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்வதுடன் அதன் பலன் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் கொள்கையுடன் அவர் வழிநடத்துகிறார். இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் 17.1 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதோடு, வருமானம் சமமாக இருக்கும் முதல் 4 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
2047-ம் ஆண்டுக்குளு் இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக திகழும் என்று நான் 100% உறுதியாக நம்புகிறேன். சுதந்திரத்தின் 100வது ஆண்டை கொண்டாடும் போது இந்தியர்கள் உலகை வழிநடத்துவார்கள்.” என தெரிவித்தார்.