"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்".
சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் எனப் போற்றப் படும் திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல்.
புது வருடம் பிறந்து வரும் முதல் பண்டிகை.
03.01.2026 - திருவாதிரை நன்னாள்
திருவாதிரை நாளன்றோ சிவபெருமானின் திரு நட்சத்திரம்.மார்கழி மாதத்தில் இந்த நாள் பௌர்ணமியோடு இணைந்து வரும்.அன்று தான் பரமசிவனின் நாளாக , ஆருத்ரா தரிசனம் செய்து அந்த தில்லை நடராஜனை வணங்கி மேன்மை அடைகிறோம்.
நமது ஒரு வருட காலம் ,தேவர்களின் ஒரு நாள் என்ற கணக்கில் மார்கழி மாதம் தேவர்களின் வைகறைப் பொழுது- பிரம்ம முகூர்த்தம் ஆகும்.
மற்ற மாதங்களில் ஏதேனும் சில நாட்களே நாம் இறைவனுக்கு உகந்ததாகக் கொண்டாடுகிறோம்.
ஆனால் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் புண்ணியமானவை. அதிகாலை எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்றும், திருப்பாவையும்,
திருவெம்பாவையும் பாடி, அரியும் அரனும் நமக்கு அருள வேண்டுகிறோம்.
மார்கழி மாதத்தில் பாவை நோன்பும், திருவாதிரை நோன்பும் நோற்பது உடலுக்கு மட்டுமன்றி மனதிற்கும் நிம்மதி அளிக்கும்.
இது ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் உணரப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட திருவாதிரை நோன்பு பண்டைய காலங்களில் கடைபிடிக்கப் பட்ட விதம் நோக்கினால், இன்றைய ஆரோக்கிய குறைவின் காரணம் நமக்குப் புரியும்.
திருமணமான பெண்கள் மாங்கல்ய பலத்திற்கும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கவும் திருவாதிரை நோன்பு இருப்பர் என்பது பாரம்பரிய பழக்கம்.
திருவாதிரைப் பண்டிகை பத்து நாட்கள்- ரேவதி நட்சத்திரம் முதல் திருவாதிரை நாள் வரை - விரதம் இருந்து பெண்களால் அனுஷ்டிக்கப் படும்.
திருவாதிரை அன்று புலர்காலையில் எழுந்து ,
மார்கழி மாத நடுங்கும் குளிரில் ,நதியில் அல்லது குளத்தில் நீராடி,இறை நாமங்களைப் பாடிக் கொண்டு சிவபெருமான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வர்.நெற்றியில் மங்கலக்குறி அணிந்தும் , தசபுஷ்பம் அணிந்தும் பெண்கள் உமா மகேஸ்வரனைத் தியானித்து பூஜை செய்து
அன்றைய நாள் விரதம் இருந்து , இறைவனுக்குப் படைத்த களியும் , கூட்டுமே உணவாகக் கொள்வர்.
தினம்தோறும் நாம் தெரிந்தும் தெரியாமலும் பல காரியங்களை செய்கிறோம். பல நேரங்களில் நாம் செய்யும் காரியங்கள், கேட்கும், பார்க்கும் விஷயங்கள், நல்லன அல்லவை என்று அறியாமலே இருக்கிறோம். இவை நல்லது, இவை நல்லதற்றது என்று நம் முன்னோர்கள் கூறியே நாம் அறிந்துள்றோம்.நாம் செய்தவற்றில் பாவங்கள் இருந்தால் அதை மன்னித்துக்கொள்ள இறைவனிடமே முறையிடுவதுதானே சரி? கருணாமயனான, மங்களகளை நல்கும் சிவபெருமான் நம்மை ஆட்கொண்டு அருள
இந்நன்னாளில் வேண்டி வணங்குவோம்.
அடியும் முடியும் காணமுடியா சிவபெருமானின் பாதத்தை தரிசிக்க வாய்ப்பு நல்கும் இரண்டு நாள்களில் ஓன்று இன்றைய திருவாதிரை. மற்றொன்று பங்குனி உத்திரம்.
இருபத்தேழு நட்சத்திரங்களில் 'திரு 'என்கிற அடைமொழி இரண்டு நட்சத்திரத்திற்குத்தான் உண்டு. ஒன்று திருவோணம்,ஶ்ரீமந் நாராயணனுக்கு உகந்தது; இன்னொன்று இன்றைய நாள் திருவாதிரை,ஶ்ரீ மகாதேவனுக்கு உகந்தது.இன்றைய நாளை 'ஆதிரை நன்னாள்'
என்றும் கூறுவார்கள்.
'ஆருத்ரா' என்றால் 'நனைந்த' என்று பொருள். சிவபெருமானுடைய கருணைக் கடலில் நாமெல்லாம் நனைந்து போகிறோமாம். அதனால் இந்த நன்னாளுக்கு ஆருத்ரா தரிசனம் என்றும் பெயர். சிவபெருமானை நினைத்து ஆராதனை செய்ய உகந்த நாள் இன்று.
புராணக் கதைகளில் படித்திருப்பீர்கள்- சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவர்களைப் பற்றி..
நாம் வேண்டும் அனைத்தையும் அப்படியே நமக்கு ஆசீர்வதிப்பார் அவர்.
அந்த ஈசனை இந்நன்னாளில் நாமும் வணங்கி அவன் அருளைப் பெற்று புண்ணியம் பெறுவோம்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க;
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க;
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க;
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க;
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 🙏🏻

சோபனா விச்வநாதன்.