அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி:

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெறி நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது என்று முன்னணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது.


இந்த செய்தியை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்து கடந்த 11-ம் தேதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை 8 வாரங்களில் அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும்.


5,000 நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்கப்பட வேண்டும். இனிமேல் ரேபிஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமைத்தார்.


இதன்படி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். விலங்குகள் நல தொண்டு அமைப்புகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சித்தார்த் தாவே உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது: டெல்லி மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கால் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லை பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லி அரசு தரப்பிலோ, மாநகராட்சி தரப்பிலோ இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தெருநாய்கள் பிரச்சினைக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த 11-ம் தேதி உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க விலங்குகள் நல தொண்டு அமைப்புகள் சார்பில் கோரப்பட்டது. ஆனால் நேற்றைய விசாரணையில் நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%