SIR | முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை: தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. மாநிலம் முழுவதும் 76 பிஎல்ஓ-க்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை மாவட்ட வாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ், இயக்குநர் கே.கே.திவாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில், எஸ்ஐஆர் தொடர்பாக பொதுமக்களுக்கு இயல்பாக எழும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அது பின்வருமாறு;
நகர்ப்புறவாசிகள் பெரும்பாலும் பணிக்கு செல்பவர்கள் என்பதால், அவர்கள் வீடுகளில் இருக்க வாய்ப்பில்லை. இவர்களிடம் எஸ்ஐஆர் படிவத்தை எப்படி கொண்டு போய் சேர்க்கப் போகிறீர்கள்?
பிஎல்ஓ-க்களும் அரசு ஊழியர்கள் தான். அவர்களின் அலுவலக பணி முடிந்த பிறகே வாக்காளர்களை சந்திக்கச் செல்வார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றுவார்கள். அதனால் அனைவரிடமும் படிவம் கொடுப்பதில் சிக்கல் இருக்காது.
முகவரி மாறி வசிப்பவர்கள் பிஎல்ஓ-க்களிடம் படிவத்தை பெற முடியாத போது அவர்களின் வாக்குரிமை என்ன ஆகும்? அவர்கள் எப்போது மீண்டும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்?
பிஎல்ஓ-க்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ஐஆர் செயலியில், சம்பந்தப்பட்ட அந்த வாக்காளர் குடிபெயர்ந்ததாக பதிவு செய்துவிடுவார்கள். அப்படி பதிவு செய்யப்பட்டவர்கள் டிசம்பர் 9-ம் தேதி முதல் நடைபெறும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அதனால் முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
ஒரு வாக்காளருக்கு 2 படிவம் மட்டுமே தரப்படுவதால் படிவத்தை பூர்த்தி செய்யும்போது தவறு நேர்ந்தால் என்ன செய்வது... இரண்டுக்கு மேல் படிவம் வழங்க வாய்ப்புள்ளதா?
தவறாக பூர்த்தி செய்தால், அடித்துவிட்டு திருத்தி எழுதி, அந்த வாக்காளர் தான் கையெழுத்திடுவார். அதை பிஎல்ஓ ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார். இதில் சிரமம் எதுவும் இருக்காது. இந்த படிவங்கள், அனைவருக்கும் பொதுவான படிவங்கள் இல்லை. ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்தனியாக, வாக்காளர் விவரங்கள், புகைப்படங்கள் அடங்கிய படிவமாக வழங்கப்படுகிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் கூடுதல் படிவங்களை அச்சிடுவது சிரமம்.
சில பகுதிகளில் படிவங்களை பெட்டிக் கடைகளில் கொடுத்து விநியோகிக்கப்படுவதாக புகார்கள் வருகிறதே?
படிவங்கள் விநியோகம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கண்டிப்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. படிவங்களை வீடு வீடாகத் தான் சென்று வழங்க வேண்டும். இதை மீறும் பிஎல்ஓ-க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில இடங்களில் அரசு ஊழியர்கள் அல்லாதோரும் பிஎல்ஓ-க்களாக நியமிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறதே?
அரசு ஊழியர்களை மட்டும் தான் பிஎல்ஓ-க்களாக நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படிவம் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட முகவரியில் வசிப்பவர்கள், அதே முகவரியில் வாக்காளர் அட்டை பெற்றிருந்தால் கட்டாயம் படிவம் வீடு தேடி வந்து சேரும். பிஎல்ஓ படிவத்தை கொடுக்காமல் இருந்தால், தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் பிரத்யேக செயலியின் டேஷ் போர்டில் பார்க்க முடியும். எதற்காக படிவம் இன்னும் சென்று சேரவில்லை என பிஎல்ஓ-க்களிடம் கேள்வி எழுப்ப முடியும். பிஎல்ஓ-க்கள் படிவத்தை வழங்காமல் இருந்தால், அதற்கான காரணத்தை இறப்பு, குடிபெயர்தல் அல்லது ஆப்சென்ட் என எஸ்ஐஆர் செயலியில் குறிப்பிட வேண்டியது கட்டாயம்.
படிவத்தில் ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயமா?
கட்டாயம் இல்லை. அது வாக்காளர்களின் விருப்பம்.
தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டால், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் வைத்திருக்காத நிலையில் என்ன செய்வது... அந்த எண்களை வழங்க வேண்டியது கட்டாயமா?
சம்பந்தப்பட்ட வாக்காளருக்கே, 2002 காலகட்டத்தில் வாக்குரிமை இருந்திருந்தால், அதன் விவரங்களை கொடுத்தால் போதும். அவர்களுக்கு வாக்குரிமை அப்போது இல்லாமல் இருந்தால் மட்டுமே பெற்றோரின் அப்போதைய விவரங்களை இப்போது கொடுக்க வேண்டும்.
2002, 2005-ம் ஆண்டுகளில் வாக்குரிமை பெற்று, அதன் விவரங்கள் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
2002 காலகட்ட வாக்காளர் பட்டியல் தற்போது இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்து படிவத்தை பூர்த்தி செய்யலாம். அதற்கு பிஎல்ஓ-க்கள் உதவுவார்கள்.
2024-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. தற்போது பெயரைச் சேர்க்க முடியுமா?
வரும் டிசம்பர் 9-ம் தேதி முதல் நடைபெறும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, படிவம் 6-ஐ கொடுத்து பெயரைச் சேர்க்கலாம்.
படிவங்களை பூர்த்தி செய்ய பிஎல்ஓ உதவாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
நிச்சயமாக உதவுவார்கள். அப்படி உதவாவிட்டால் 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்பு கொள்வதற்கான எண்கள், முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. அங்கும் புகார் அளிக்கலாம்.
இந்த படிவங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளதா?
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், அது ஆதார் அடிப்படையில் ஓடிபி பெற்று செயல்படும் என்பதால், ஆதார் அட்டையிலும், வாக்காளர் அட்டையிலும் பெயர் ஒரே மாதிரி இடம் பெற்றிருப்பது அவசியம். குறிப்பிட்ட முகவரியில் வசிக்காமல் ஆன்லைனில் விண்ணப்பித்தால், தொடர்புடைய பிஎல்ஓ அந்த படிவத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்.
தந்தை, மகன் வெளிநாட்டில் வேலை செய்யும்போது அவர்கள் எப்படி படிவத்தை பூர்த்தி செய்ய முடியும்... அப்போது அவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?
அதே முகவரியில் குடும்பத்தினர் யாராவது வசித்து வந்தால், அந்த வாக்காளர்களின் சார்பில் படிவத்தை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு வழங்கலாம்.